கோலாலம்பூர், 19 செப்டம்பர் (பெர்னாமா) -- ம.இ.கா, பெரிக்காத்தான் நேஷனலில் இணைவது குறித்து, அக்கட்சியின் தலைவர் டான் ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனிடம் தாம் உடனடியாக விளக்கம் பெறவிருப்பதாக தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
கூடிய விரைவில், விக்னேஸ்வரனுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று துணைப் பிரதமருமான சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
''நான் அவரிடம் (டான் ஶ்ரீ எஸ். ஏ விக்னேஸ்வரன்) கேட்கிறேன்,'' என்றார் அவர்.
இன்று, கோலாலம்பூரில், நடைபெற்ற டேவான் பாஹாசா புஸ்தாவின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது சாஹிட் ஹமிடி அவ்வாறு குறிப்பிட்டார்.
முன்னதாக, பெரிக்காத்தானுடன் மஇகாவுடன் இணைந்து செயல்படவோ அல்லது இணைவதற்கோ விக்னேஸ்வரன், திறந்த மனப்பான்மையை வெளிப்படுத்தியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
ஆனால், அது இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்றும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் அவை கூறின.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)