கோத்தா பாரு, 21 செப்டம்பர் (பெர்னாமா) -- உரிமம் இன்றி துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை வைத்திருந்தாக இரு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கிய ஆடவர் ஒருவர், இன்று கோத்தா பாரு செக்ஷன் நீதிமன்றத்தில் விடுவித்து விடுதலை செய்யப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்ட 38 வயதுடைய முஹமட் ஹசிமான் ஹிகாமர்ஹகிமி என்பவருக்கு எதிரான குற்றத்தை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க அரசு தரப்பு தவறியதைத் தொடர்ந்து, நீதிபதி சுல்கிப்லி அபில்லா அத்தீர்ப்பை அறிவித்தார்.
இரு குற்றச்சாட்டுகளின் சாராம்சத்தையும் முதல் பார்வையில் நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதாக, தமது சுருக்கமான தீர்ப்பில் நீதிபதி சுல்கிப்லி அபில்லா கூறினார்.
எனவே, கைப்பற்றப்பட்ட ஆயுதம் குற்றம் சாட்டப்பட்டவர் வசம் மற்றும் கட்டுப்பாட்டில் இருந்தது என்பதை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதைத் தொடர்ந்து, அவ்விரு குற்றங்களில் இருந்தும், அவ்வாடவரை விடுவித்து விடுதலை செய்வதாக நீதிபதி தெரிவித்தார்.
அதேவேளையில், இவ்வழக்கு தொடர்பில், விசாரணை அதிகாரி மற்றும் கைது அதிகாரியின் சாட்சி வாக்குமூலங்களுக்கு இடையிலும் முரண்பாடுகள் இருப்பதை நீதிமன்றம் கண்டறிந்தது.
இதனிடையே, கடந்தாண்டு மார்ச் 12ஆம் இரவு மணி 11-க்கு கோத்தா பாரு, கம்போங் தஞ்சோங் சாட்டில் உள்ள ஓர் இல்லத்தில் துப்பாக்கியும் தோட்டாக்களும் வைத்திருந்ததாக முஹமட் ஹசிமான் மீது, முன்னதாக இரு குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)