சிரம்பான், 21 செப்டம்பர் (பெர்னாமா) -- நாட்டின் 16-வது பொதுத் தேர்தல், நாடாளுமன்றத்துக்கும் மாநில சட்டமன்றத்துக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று ஜனநாயக செயல்கட்சி, ஜசெக பரிந்துரைத்துள்ளது.
குறிப்பாக, தீபகற்ப மாநிலங்களைச் சேர்ந்த தேர்தல்களை ஒருங்கிணைத்தால், கட்சியின் தயார்நிலை பணிகள் சீரமைக்கப்படுவதோடு, அதன் செலவுகளையும் குறைக்க முடியும் என்று கருதப்படுகிறது.
ஜனநாயக செயல்முறை சீராக இயங்கவும், குறிப்பாக நம்பிக்கை கூட்டணியின் கீழ் உள்ள கட்சிகளின் அரசியல் திட்டங்கள் பயனுள்ளதாக அமையவும் இந்த பரிந்துரை பரிசீலிக்கப்பட வேண்டியது அவசியம் என்று ஜசெகவின் பொது செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
சட்டமன்றத்தைக் கலைப்பது, மாநில அதிகார வரம்பிற்கு உட்பட்டிருந்தாலும் மக்கள் மற்றும் நாட்டின் நலன்களுக்காக மாநிலமும் மத்தியமும் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம் என்று அந்தோணி லோக் கருத்துரைத்தார்.
அரசாங்கத்தின் செலவீனங்களை இந்நடவடிக்கை குறைக்கும் என்பதோடு, ஒவ்வொரு கட்சியும் தேர்தலில் அதன் முயற்சிகளை அதிகப்படுத்த அரசியல் வியூக அடிப்படையிலும் இது துணை புரியும் என்று லோக் நம்பிக்கைத் தெரிவித்தார்.
''கடந்த பொதுத் தேர்தலில் கொவிட்-19 நோய்த்தொற்று உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்பட்ட நிச்சயமற்ற அரசியல் சூழ்நிலையால், தனித்தனியாக தேர்தல்கள் நடத்த வேண்டியிருந்தது. பதவிக்காலம் முடியும் வரை அதை நீட்டிக்குமாறு நாங்கள் கேட்டோம். ஆனால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டபோதும், நம்பிக்கைக் கூட்டணி கீழுள்ள மாநிலங்கள் சட்டமன்றத்தைக் கலைக்கவில்லை. பாஸ் கட்சியும் அதேநிலையைப் பின்பற்றியது'', என்றார் அவர்.
இன்று சிரம்பானில் நடைபெற்ற நெகிரி செம்பிலான் மாநில அளவிலான 23-வது ஜசெக ஆண்டு மாநாட்டிற்கு தலைமையேற்ற பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
இதனிடையே, நாட்டின் வலுவான பொருளாதாரம் மற்றும் சிறந்த அரசியல் நிலைத்தன்மை உட்பட பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமையில் நாடு சிறந்த அடைவுநிலையைப் பெற்று வருவதாக லோக் தமது உரையில் புகழாரம் சூட்டினார்.
இதனிடையே, தேர்தல் காலத்தில் ஒருமைப்பாட்டு அரசாங்கத்தில் இடப் பகிர்வு குறித்து தமது கருத்தினை அந்தோணி லோக் தெரிவித்தார்.
''எங்களின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் கொள்கைக்கு ஊறுவிளைவிக்காமல் அனைத்து கட்சிகளும் உரிய ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அவ்வாறு புரிந்துணர்வுடன் இருந்தால் ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு இருக்காது. தொகுதிப் பங்கீட்டின் கொள்கையும் தெளிவாகவே உள்ளது. ஒரு கட்சி எந்தத் தொகுதியில் வென்றாலும், அத்தொகுதியில் அக்கட்சி நிலைபெற வேண்டும்'', என்றார் அவர்.
இருப்பினும், அந்த ஒத்துழைப்பு கட்டாயமாக தொடர வேண்டும் என்று ஜசெக வலியுறுத்தவில்லை என்றும், அது அந்தந்த கட்சி உறுப்பினர்களின் நிலைப்பாட்டைப் அது பொறுத்தது எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)