உலு கிந்தா, 20 செப்டம்பர் (பெர்னாமா) - சமயத்துடன் கல்வியிலும் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் வகையில் பேராக் மாநில இந்து அர்ச்சர் சங்கம் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மாபெரும் கல்வி யாகத்தை இன்று சிறப்பாக நடத்தியது.
உலு கிந்தா, கம்போங் கெபாயாங்கில் உள்ள அருள்மிகு சிவ சுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெற்ற இக்கல்வி யாகத்தைத் தொடர்ந்து மாநிலத்தில் உள்ள 12 தமிழ்ப்பள்ளிகளுக்கு கணிசமான நிதி உதவியும் வழங்கப்பட்டது.
காலை ஏழு மணி தொடங்கி ஆலயத்தில் பல்வேறு விதமான பூஜைகளும் மாணவர்களின் கல்வியை முன்னிறுத்தி சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றதாக மலேசிய இந்து அர்ச்சகர் சங்கத்தின் பேராக் மாநிலத் தலைவர் சிவ ஶ்ரீ கணேஷ்குமார் குருக்கள் தெரிவித்தார்.
இந்த யாகத்தில் சிறப்பு பிரமுகராக அழைக்கப்பட்டிருந்த பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ. சிவநேசன், இதுவரை சமய காரியங்களில் மும்முரம் காட்டி வந்த அர்ச்சகர்கள் தற்போது தமிழ்ப்பள்ளி மற்றும் இந்திய மாணவர்களின் வளர்ச்சியிலும் கவனம் செலுத்துவது பாராட்டுக்குரியது என்றார்.
இம்முயற்சியை ஆலய நிர்வாகம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், மாநிலத்தில் உள்ள மற்ற ஆலயங்களும் கல்வி சார்ந்த நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், மாநில அளவில் சங்கம் சிறந்த வளர்ச்சி அடைய, பேராக் அரச்சகர் சங்கத்திற்கு சிவநேசன் 25 ஆயிரம் ரிங்கிட் மானியமும் வழங்கினார்.
கல்வி யாகத்திற்கு பின்னர், ஆலய மண்டபத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி அங்கீகரிக்கப்பட்டதுடன் உற்சாகமூட்டும் சொற்பொழிவும் இடம்பெற்றது.
சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த கல்வி யாகத்தில் 500 மாணவர்கள் பங்கேற்றனர்
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)