பெனாம்பாங், 21 செப்டம்பர் (பெர்னாமா) -- எஸ்.கே.பி.எஸ் எனப்படும் பெட்ரோல் கட்டுப்பாட்டு அமைப்பில் பதிவு செய்து ரோன் 95 பெட்ரோலுக்கான உதவி தொகையைப் பெற்றுக் கொள்ளுமாறு, பொது மற்றும் தரைவழி போக்குவரத்து நிறுவனங்களுக்கு உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு, கே.பி.டி.என் வலியுறுத்தியது.
இம்மாதம் 15-ஆம் தேதி தொடங்கி நேற்று வரை சுமார் 1,790 நிறுவனங்கள் விண்ணப்பித்திருக்கும் நிலையில், பொது மற்றும் தரைவழி போக்குவரத்து துறையைச் சேர்ந்த 5,449 வாகனங்கள் அதில் அடங்கும் என்று கே.பி.டி.என் தெரிவித்தது.
நேற்று வரை, 249 வாகனங்களை உள்ளடக்கி 164 நிறுவனங்கள் எஸ்.கே.பி.எஸ்-சில் பதிவு செய்துள்ளன.
அதன் மொத்த எண்ணிக்கையில் 103 பொது போக்குவரத்து துறையைச் சேர்ந்த 106 வாகனங்களும், 61 நிலப் பொருட்கள் போக்குவரத்து துறையைச் சேர்ந்த 143 வாகனங்களும் அடங்கும்.
மேலும், தகுதியுடையதாக மதிப்பிடப்பட்ட 4,647 வாகனங்களில் சபாவில் 89 வாகனங்களும் சரவாக்கில் ஆறு வாகனங்களும் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிசான் முஹமட் அலி தெரிவித்தார்.
''இதன் செயல்முறையைப் பார்க்கையில், எஸ்.கே.பி.எஸுக்கு பதிவு செய்து விண்ணப்பிப்பது எளிது. அவர்கள் இப்போது பதிவு செய்யும் வேளையில், ஆவணங்கள் முழுமையாக இருந்தால் உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சு ஒரு நாள் அல்லது ஒரு மணி நேரத்திற்குள் அதை அங்கீகரிக்க முடியும் என்று நாங்கள் நினைக்கிறோம். அதைத் தொடர்ந்து அவர்கள் ஒப்புதல் அறிவிப்பைப் பெறும்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து எரிபொருள் அட்டைப் பெற அவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு சற்று கால அவகாசம் எடுக்கும்'', என்றார் அவர்.
இதனிடையே, நாடு முழுவதும் உள்ள சுமார் ஒரு லட்சம் பொது போக்குவரத்து மற்றும் சரக்கு நிறுவன வாகனங்கள், பெட்ரோலுக்கான உதவி தொகையைப் பெற தகுதியானவர்கள் என்பதை முன்னதாக, கே.பி.டி.என் அடையாளம் கண்டுள்ளது.
எனவே, mysubsidi.kpdn.gov.my என்ற இணைப்பின் மூலம் எஸ்.கே.பி.எஸ்-சில் பதிவு செய்து கொள்ளலாம்.
மற்றொரு நிலவரத்தில், இலக்கிடப்பட்ட ரோன் 95 பெட்ரோலுக்கான உதவித் தொகை செயலாக்கத்திற்கு, மைகார்ட் அட்டை பயன்பாட்டை மட்டும் நம்பியிருக்காமல், பல்வேறு கட்டண வழிமுறைகளும் பயன்படுத்தப்படும்.
எனவே, உதவித் தொகை பெறப்பட்ட பெட்ரோலை வாங்குவதற்கு சிரமங்கள் எதிர்கொள்ளப்படும் என்று பொதுமக்கள் கவலை கொள்ளத் தேவையில்லை.
ஏனெனில், உதவித்தொகை பெறுவதற்கு பல்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தி அவர்கள் தேர்வு செய்யலாம் என்று உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சர் டத்தோ அர்மிசான் முஹமட் அலி தெரிவித்தார்.
''உட்புற கட்டண முனையத்திலோ அல்லது எரிவாயு நிலையத்தின் வெளிப்புற கட்டண முனையத்திலோ பணம் செலுத்தும் முறை உள்ளது. நீங்கள் ண்ணெய் நிறுவனங்களின் உள்ளே பணம் செலுத்தலாம், வெளியே பணம் செலுத்தலாம். எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து ஏற்கனவே உள்ள விண்ணப்பங்களையும் நாம் பயன்படுத்தலாம்'', என்று அவர் கூறினார்.
இதனிடையே, நிதி அமைச்சால் விரைவில் அறிவிக்கப்படும் இலக்கிடப்பட்ட ரோன்95 பெட்ரோல் உதவித் தொகையை சீராக செயல்படுத்துவதற்காக, ஆண்டு தொடக்கத்தில் இருந்தே கவனமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை அரசாங்கம் உறுதி செய்துள்ளதாக அர்மிசான் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)