கோலாலம்பூர், 23 செப்டம்பர் (பெர்னாமா) -- மீள்தன்மை, தன்னம்பிக்கை மற்றும் உலகளாவிய போட்டித்தன்மை வாய்ந்த கூட்டமைப்பை உருவாக்க வட்டாரங்களுக்கு இடையிலான வர்த்தகத்தை ஆசியான் வலுப்படுத்த வேண்டும்.
ஆசியான் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், சுமார் 20 முதல் 30 விழுக்காடு வரை தேக்கமடைந்திருப்பதால், அது மிகவும் அவசியமானது.
ஆசியான் தன்னை ஒரு முன்னணி உலகளாவிய முதலீட்டு தளமாக நிலைநிறுத்த வேண்டுமானால், இந்த தேக்கநிலை கவனிக்கப்பட வேண்டியது அவசியம் என்று முதலீடு, வாணிப மற்றும் தொழில்துறை அமைச்சர், தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் கூறினார்.
''ஆசியான் ஒரு நண்பரிடமிருந்து இன்னொரு நண்பராக தொடர்ந்து வளர்ந்து வருகிறது. உலகளாவிய முதலீட்டிற்கான இலக்குகளின் நிலையை நாங்கள் வலுப்படுத்த விரும்புகிறோம். அதிகரித்து வரும் நிலையற்ற தன்மை மற்றும் நிச்சயமற்ற உலகளாவிய வர்த்தக சூழல், வட்டார பொருளாதார ஒருங்கிணைப்பை ஆழப்படுத்துவதற்கான அதன் முயற்சிகளை ஆசியான் இரட்டிப்பாக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றது'', என்றார் அவர்.
இன்று நடைபெற்ற 39-ஆவது ஆசியான் சுதந்திர வர்த்தக பகுதி, AFTA மன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஆசியானின் மகத்தான ஆற்றல் குறித்து தெங்கு சஃப்ருல் வலியுறுத்தினார்.
சுமார் 70 கோடி மக்கள் உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் துடிப்பான பயனீட்டாளர் சந்தைகளை உருவாக்குவதாக, அவர் மேலும் கூறினார்.
எனவே, வர்த்தக வசதியை துரிதப்படுத்தி நிதி செயல்திறனை மேம்படுத்தும் அதே வேளையில், சவால்களைக் கையாள்வதற்கான தொடர் முயற்சிகளைத் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று தெங்கு சஃப்ருல் வலியுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)