கோலாலம்பூர், 23 செப்டம்பர் (பெர்னாமா) -- விநியோக சங்கிலியின் மீள்தன்மை, இலக்கவியல் பொருளாதார ஒத்துழைப்பு, பசுமை மாற்றம் மற்றும் வர்த்தக வசதி ஆகியவற்றை 2025 ஆசியான் பொருளாதார அமைச்சர்கள் கூட்டம் ஏ.ஈ.எம்-இல் ஆசியான் உரையாடல் பங்காளி நாடான சீனா முன்னிலைப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
வட்டார போட்டித்தன்மையை வலுப்படுத்துவதற்கும், அது உள்ளிட்ட வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், இம்முயற்சி ஆசியான் திட்டங்களுடன் இணங்கியுள்ளது.
24-வது ஏ.ஈ.எம் மற்றும் சீனா வர்த்தக அமைச்சு, MOFCOM கலந்துரையாடல், MOFCOM மற்றும் அதை தொடர்ந்து 28-வது ஏ.ஈ.எம்+3 கலந்துரையாடலும் நாளை நடைபெறவுள்ளன.
உலகளாவிய வர்த்தக பதட்டங்களுக்கு மத்தியில், குறிப்பாக, அமெரிக்கா வரிகளை விதித்த பிறகு விநியோகச் சங்கிலியின் மீள்தன்மையை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு பெய்ஜிங் முன்னுரிமை அளிக்கும் என்று தாம் நம்புவதாக, IPPFA நிறுவனத்தின் இயக்குநரும் தேசிய பொருளாதார ஆய்வாளருமான முஹமட் சிடேக் ஜந்தான் கூறினார்.
இவ்வாண்டில் கையெழுத்திட திட்டமிடப்பட்டிருக்கும், ஆசியான்-சீனா தடையற்ற வாணிப பகுதி, ACFTA 3.0-ஐ மேம்படுத்தும் நெறிமுறையின் செயல்பாடை விரிவுப்படுத்துவதே அதன் முக்கிய நோக்கமாகும் என்று அவர் தெரிவித்தார்.
வர்த்தக உறவுகளை விரிவுப்படுத்த விரும்பும் நாடுகளுக்கான அணுகல் செயல்முறையை நிறைவு செய்வது, உலக வர்த்தக அமைப்பு, WTO-வில் சீர்திருத்தம் செய்ய அழைப்பு விடுப்பது உள்ளிட்ட வட்டார விரிவான பொருளாதார கூட்டமைப்பு, RCEP-இன் கீழ் அதிக ஒருங்கிணைப்புக்கு சீனா அழுத்தம் கொடுக்கும் என்று எதிர்ப்பார்க்கபடுவதாகவும் முஹமட் சிடேக் கூறினார்.
மேலும், உள்ளூர் நாணயத்தின் பரிவர்த்தனை கட்டமைப்பை வர்த்தக தீர்வாக வலுப்படுத்தும் முயற்சிகள், நிகழ்நேர மற்றும் குறைந்த விலை எல்லை தாண்டிய செயல்பாடு மற்றும் QR இணைக்கப்பட்ட அமைப்புகள் போன்ற ஆசியான் கட்டண இணைப்புக்கான முயற்சிகளும் கவனம் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் விவரித்தார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]