கோலா திரெங்கானு, 22 செப்டம்பர் (பெர்னாமா) - கிளந்தான், திரெங்கானு, பகாங், சிலாங்கூர் ஆகிய நான்கு மாநிலங்களை உட்படுத்தி மேற்கொள்ளப்படும் கிழக்குக்கரை ரயில் பாதைத் திட்டம், ஈ.சி.ஆர்.எல் கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி 87 விழுக்காட்டு ஒட்டுமொத்த வளர்ச்சியை எட்டியுள்ளது.
நில விவகாரங்கள் முன்கூட்டியே தீர்க்கப்பட்டதாலும் சமசரியான புவியியல் காரணங்கள் மற்றும் குறைந்த கட்டுமான சவால்களாலும், திரெங்கானுவில் இத்திட்டம் விரைந்து நிறைவுப்படுத்தப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
"எனவே திரெங்கானுவில் அத்திட்டம் ஏறக்குறைய நிறைவு பெற்றுவிட்டது. தற்போது கோம்பாக்கில் இது இன்னும் நிறைவு பெறாமல் உள்ளது. பெந்தோங்கிலிருந்து கோம்பாக் வரைக்கும் ஒரு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கெந்திங்கிலிருந்து கோம்பாக் வரையிலான பகுதி மிகவும் சவால் நிறைந்ததாக உள்ளது," என்றார் அவர்.
இன்று பசார் பாயாங்கில், கோலா தெரெங்கானு BAS.MY சேவை உருமாற்றத் திட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு கூறினார்.
கிளந்தான் மற்றும் திரெங்கானுவில் ஈ.சி.ஆர்.எல்-இன் வளர்ச்சி குறித்து கவலைப்படத் தேவையில்லை என்று தெரிவித்த அவர், ஏனெனில் பெரும்பாலான கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து விட்டதாகக் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)