கோலா திரெங்கானு, 22 செப்டம்பர் (பெர்னாமா) - கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், KLIA-வின் முனையம் ஒன்று மற்றும் இரண்டில் உள்ள வாடகை கார் ஓட்டுநர்களின் செயல்பாடுகள் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தால் அவர்களுடன் போக்குவரத்து அமைச்சு ஒருபோதும் சமரசம் செய்யாது.
அண்மையில், KLIA முனையம் இரண்டில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இரட்டை கட்டணம் வசூலித்து ஏமாற்றப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து, சாலைப் போக்குவரத்துத் துறை ஜேபிஜே ஓர் ஓட்டுநர் மீது கடுமை நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட அச்சுற்றுலாப் பயணி ஏமாற்றப்பட்டார் என்று செய்தி பரவலாகப் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு இரகசிய நடவடிக்கை மூலம் சம்பந்தப்பட்ட அக்காரை ஜேபிஜே கண்காணித்து வந்ததாக தமது முகநூலில் வெளியிட்ட ஒரு பதிவில் அந்தோணி லோக் தெரிவித்தார்.
தற்போது சம்பந்தப்பட்ட அக்கார் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, விசாரணை அறிக்கையும் திறக்கப்பட்டுள்ளது.
விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட ஜேபிஜே-க்கு தமது பாராட்டைத் தெரிவித்து கொள்வதாகவும் லோக் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி, ஒரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணி, கோலாலம்பூரில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்குச் செல்வதற்காக பேருந்து தேடும் போது, உள்நாட்டைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் 60 ரிங்கிட் கட்டணம் வசூலித்ததாக ஒரு காணொளி பரவலாகப் பகிரப்பட்டது.
இருப்பினும், சம்பந்தப்பட்ட தங்கும் விடுதியை அடைந்ததும் அங்கு நிறுத்தாமல், அமைதியான மற்றோர் இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு அப்பயணியிடமிருந்து 14 மடங்கு அதிகமாக அதாவது 836 ரிங்கிட்டை கட்டணமாக வசூலித்துள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)