கோலாலம்பூர், ஜனவரி 20 (பெர்னாமா) -- 250 கோடி ரிங்கிட் கள்ளப் பண பறிமாற்றம் மோசடி தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் IJM Corporation Bhd நிறுவனத்தில் உள்ள 9 பேரிடம் வாக்குமூலத்தைப் பதிவுச் செய்துள்ளது.
இன்று காலை 10 மணி அளவில் எஸ்.பி.ஆர்.எம் தலைமையகத்தில் அந்த 9 பேரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டதாகச் எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையன் டான் ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்துள்ளார்.
''இந்த துறை தொடர்பிலான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தியுள்ளோம். நேற்றுதான் விசாரணையைத் தொடங்கினோம். எனவே விசாரணைக் குறித்த தகவல்களை என்னால் இப்போது கருத்துரைக்க முடியாது. இதில் வழக்கு இருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டால் விசாரணையைத் தொடர்வோம். வழக்கு இல்லை என்றால் அதனை அரசு தரப்பு துணை வழக்கறிஞரிடம் தெரிவிப்போம். அதன் பின்னர் நம் வழக்கு குறித்து அறிவிப்பேன்'', என்றார் டான் ஶ்ரீ அசாம் பாக்கி.
நெகிரி செம்பிலான் நீலாயில் செவ்வாய்கிழமை எஸ்.பி.ஆர்.எம் கல்வி கழகத்தின் அடிப்படை பயிற்சி மையத்தைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது அசாம் பாக்கி இதனைத் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் சந்தேகிக்கப்படும் அனைத்து தரப்பினர்களிடம் இருந்து முழுமையான வாக்குமூலத்தைப் பெறுவதுடன் பல்வேறு ஆவணங்களும் ஆராய்வதற்கு அவகாசம் தேவைப்படுவதாக அவர் மேலும் சொன்னார்.
விசாரணையைப் பாதிக்கும் என்பதால் பொதுமக்கள் இந்த வழக்குத் தொடர்பில் எந்த ஓர் ஆருடங்களையும் வெளியிட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)