Ad Banner
 பொது

30ஆம் தேதி வெள்ளி இரதம் பத்துமலையை நோக்கிப் புறப்படும்

25/01/2026 06:34 PM

பத்துமலை, ஜனவரி 25 (பெர்னாமா) -- இவ்வாண்டு தைப்பூசத்தை முன்னிட்டு வரும் 30ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு மணி 7.30-க்கு தொடங்கும் சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து, இரவு மணி 9-க்கு கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்திலிருந்து வெள்ளி இரதம் புறப்படும்.

எனவே, இரத ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அனைவரும் சமய நெறியைப் பின்பற்றி, ஒழுக்கத்தை கடைபிடிக்குமாறு கோலாலம்பூர் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தான அறங்காவலர் டத்தோ சிவகுமார் நடராஜா கேட்டுக் கொண்டார். 

"அங்கிருந்து புறப்படும் இரதம் மறுநாள் 31ஆம் தேதி மாலை மணி 5.30-க்குள் பத்துமலை திருத்தலத்தை வந்தடையும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னரே தேவஸ்தானத் தலைவரின் தலைமையில் கொடியேற்றம் செய்யப்பட்டு தைப்பூச விழா அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படும்," என்று அவர் கூறினார்.

தை மாதம் தொடங்கியே அதிகமான பக்தர்கள் பால்குடம், காவடி என தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றி வந்தாலும், தை மாத பூச நடசத்திரமான தைப்பூசன்று நேர்த்திகடன் செலுத்த வேண்டும் என்று பல பக்தர்கள் காத்திருப்பர்.

அதனால், அன்றைய தினத்தில் பால் குடம் ஏந்திச் செல்பவர்களுக்கும், காவடி எடுப்பவர்களுக்கும் பிரத்தியேக வழிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் விவரித்தார்.

"எவ்வகை காத்திருப்பும் இன்றி பால்குடம் ஏந்திச் செல்பவர்கள் முதல் வரிசை படிகட்டில் ஏறினால் நேராக சன்னதியைச் சென்று சேர முடியும். அதேபோல காவடி எடுப்பவர்களுக்கு இரண்டாம் வரிசை படிகட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உறுமி மேள வாத்தியக் கலைஞர்கள் மலையேறுவதற்கு அனுமதி இல்லாததால் மலையடிவாரத்தில் உள்ள விநாயகர் ஆலயத்தின் அருகே அவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது," என்று அவர் விளக்கமளித்தார்.

இதைத் தவிர்த்து ஆற்றங்கரையில் பக்தர்கள் நீராடுவதற்கு போதுமான வசதிகள், அன்னதானம், கலாச்சார மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை நிர்வாகம் மேற்கொண்டுள்ளதாகவும் சிவகுமார் தெரிவித்தார்.

தைப்பூச காலகட்டத்தில், தேவஸ்தான நிர்வாகத்திற்கு உட்படாத இடங்களில் வாகனங்களை நிறுத்துபவர்களிடம் மூன்றாம் தரப்பினர் சிலர் கூடுதலாக பணம் வசூலிப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அவர் விளக்கம் அளித்தார்.

"அவ்வாறு பணம் வசூலித்தால் பொதுமக்கள் கொடுக்கக்கூடாது. மேலும், அருகில் பணியில் இருக்கும் போலீசாரிடம் அது குறித்து புகார் அளிக்கலாம். இவ்வாறு செய்தால் முடிந்தவரை இப்பிரசனைகளைக் களையலாம்.  அதை செய்யாமல் கூடுதலான பணத்தை அத்தரப்பினரிடம் கொடுத்திவிட்ட பின்னர் ஆலய நிர்வாகத்தை குறை கூறுவிதல் எவ்வித நியாயமும் இல்லை," என்றார் அவர்.

மேலும், கேடிஎம் நிறுவனம் ஜனவரி 30-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 2-ஆம் தேதி வரைக்கும் 24 மணிநேர இரயில் சேவையை வழங்கியுள்ளதால், முடிந்தவரை பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அவர் ஆலோசனைக் கூறினார்

அதேவேளையில் ஆலயத்திற்கு வருபவர்கள் முடிந்தவரை தங்க ஆபரணங்கள் அணிந்து வருவதைக் குறைத்து கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

அவற்றுடன், ஆலயம் முழுவதும் நூற்றுக் கணக்கான குப்பைத் தொட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளதால், குப்பைகளை கண்ட இடத்தில் வீச வேண்டாம் என்று வலியுறுத்திய சிவகுமார், அவ்வாறு வீசுபவர்களுக்கு அமலாக்கத் தரப்பினர் அபராதம் விதித்தால் அதற்கு தேவஸ்தான எவ்வகையிலும் பொறுப்பேற்காது என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.

இதனிடையே, தைப்பூசத்திற்கான முன்னேற்பாட்டு பணிகளைப் பார்வையிடுவதற்காக, வரும் 30ஆம் தேதி வெள்ளிக்கிழமை, பிற்பகல் மணி 2.30-க்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், பத்துமலை திருத்தலத்திற்கு வருகைப் புரிவதாகத் தெரிவித்துள்ளதால், அவரை வரவேற்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் சிவகுமார் கூறினார்.

இவ்வாண்டு பத்துமலை தைப்பூசத்தில் பக்தர்கள், பொதுமக்கள், சுற்றுப்பயணிகள் என சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பத்துமலை தைப்பூசத்திற்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் டத்தோ சிவகுமார் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)