Ad Banner
 பொது

சமூக ஊடகத்தைப் பயன்படுத்துவதற்கான வயது வரம்பு; ஜூலையில் அமலுக்கு வரலாம்

26/01/2026 03:01 PM

கூலாய், 26 ஜனவரி (பெர்னாமா) --  குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் மீதான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் இணையத்தில் பொருத்தமற்ற உள்ளடக்கத்திற்கு ஆளாகும் அபாயத்திலிருந்து பாதுகாக்கும் முயற்சியாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான 16 வயது வரம்பு, அடுத்த ஜூலை மாத தொடக்கத்தில் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முழுமையாக அமல்படுத்துவதற்கு முன்னதாக, அதன் சிறந்த முறைகளை அரசாங்கம் சோதிக்கும் வகையில் தற்போது அவ்விவகாரம் ஒழுங்குமுறை அனுமதி பரிசோதனை கட்டத்தில் இருப்பதாக, தொடர்பு துணை அமைச்சர் தியோ நி சிங் கூறினார்.

OnSA எனப்படும் இணையப் பாதுகாப்பு சட்டத்திற்கு இணங்க தற்போதுள்ள நடவடிக்கை உள்ளதாகவும், பயனுள்ள அணுகுமுறைகளை அடையாளம் காண தள வழங்குநர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தியோ நி சிங் தெரிவித்தார்.

''நாங்கள் தள வழங்குநர்களுடன் கலந்துரையாடல்களைத் தொடங்கியுள்ளோம். எனவே, தற்போது நாம் ஒழுங்குமுறை கட்டத்தில் உள்ளோம். வயது சரிப்பார்ப்பைச் செய்வதற்கான மிகச் சிறந்த, பயனுள்ள மற்றும் பாதுகாப்பான வழியை நாங்கள் தேடுகின்றோம்'', என்றார் அவர்.

இன்று, ஜோகூர், கூலாயில் உள்ள புத்ரா உத்தாமா தேசியப் பள்ளியில், BAP எனப்படும் பள்ளி தவணைக்கான தொடக்கக் கட்ட உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், அவர் செய்தியாளர்களிடம் அதனை கூறினார்.

முன்னதாக, தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் அறிவித்தது போல, இவ்வாண்டின் இரண்டாம் பாதியில், அதாவது மூன்றாம் அல்லது நான்காம் காலாண்டில் இத்திட்டம் அமலுக்கு வரும் என்று தமது தரப்பு எதிர்பார்ப்பதாக தியோ நம்பிக்கை தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)