Ad Banner
 பொது

தபால் தலை சேகரிக்கும் பொழுதுபோக்கில் இன்றளவும் ஆர்வம் காட்டும் மூத்த குடிமகன் 

26/01/2026 05:18 PM

கோலா திரெங்கானு, ஜனவரி 26 (பெர்னாமா) -- திரங்கானு மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நபர் ஒருவர் 15 வயதிலிருந்து தொடங்கிய தபால் தலை சேகரிக்கும் பொழுதுபோக்கை இன்றளவும் தொடர்கிறார்.

மூத்த குடிமகனான வாங் ஃபூக் சிக்கிற்கு 1958ஆம் ஆண்டிலிருந்து
தபால் தலைகளைச் சேகரிக்கும் ஆர்வம் இருந்தது.

இன்று வரை நன்கு பாதுகாக்கப்பட்ட 1957ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய தின தபால் தலை உட்பட பல்வேறு வகையான 1,000க்கும் மேற்பட்ட தபால் தலைகளை அவர் சேமித்து வைத்துள்ளார்.

அலுவலகங்களைச் சுற்றியுள்ள குப்பைத் தொட்டிகளில் இருந்து பயன்படுத்தப்பட்ட தபால் தலைகளை அவர் அடிக்கடி சேகரித்து பின்னர் அவற்றை தபால்களைத் தொகுத்து வைக்கும் செருகேடுகளில் சேமித்ததில் இருந்து அந்த ஆர்வம் உருவானதாக வாங் தெரிவித்தார்.

அண்மையில் கோலா திரங்கானுவில் உள்ள கம்போங் தியோங் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது இல்லத்தில் பெர்னாமா சந்தித்தபோது Wang அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

முன்னதாக POS MALAYSIA நிறுவனம் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் தாமும் மறைந்த தமது மனைவி வாங் ஃபூக் சிக்கின் முகத்தைக் கொண்ட தனிப்பட்ட தபால் தலை ஒன்றையும் வாங் உருவாக்கியுள்ளார்.

மேலும், வரலாற்று மதிப்புகள் நிறைந்த பழமையான பண்பாட்டு பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் முயற்சியாகத் தபால் தலைகள் சேகரிக்கும் பொழுதுபோக்கை இளைய தலைமுறையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அதன்படி அவர் தனது தபால் தலைகள் சேகரிப்பைத் தனது பிள்ளைகளுக்கு விட்டுச் செல்வதாகவும் ஒருவேளை அவர்களுக்கு ஆர்வம் இல்லாவிட்டால் தாம் சேகரித்த தபால் தலைகள் பொதுமக்களின் பார்வைக்காக அருங்காட்சியகங்களுக்கு ஒப்படைக்கப்படும் என்றும் வாங் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)