பெட்டாலிங் ஜெயா, 26 ஜனவரி (பெர்னாமா) -- பதிவுச் செய்யப்பட்ட அனைத்து GRAB ஓட்டுநர்களுக்கும், சமூக பாதுகாப்பு அமைப்பு, பெர்கெசோவின் கீழ் 15 விழுக்காடு பங்களிப்பை விரிவுப்படுத்த Grab Malaysia நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.
இரவு பகல் பாராது உழைக்கும் GRAB ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் இச்சலுகையின் மூலம் முழு நேரம் மட்டுமின்றி பகுதி நேர ஓட்டுநர்களும் பயன் பெறுவார்கள் என்று மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.
"முந்தைய காலத்தில் முழு நேர கிரேப் ஓட்டுநர்கள் பெர்கெசோவில் 30 விழுக்காடு பங்களிப்பைச் செலுத்தி வந்தனர். இதர ஓட்டுநர்களுக்கு 10 விழுக்காடு வழங்கினர். ஆனால், தற்போது அனைத்து ஓட்டுநர்களுக்கும் சமமாக 15 விழுக்காடு பங்களிப்பை வழங்க கிரேப் மலேசியா நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஓட்டுநர்கள் ஒரு நாளைக்கு 40 அல்லது 50 சென் மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும்", என்றார் அவர்.
பெர்கெசோவின் கீழ் வழங்கப்படும் பங்களிப்பு, GRAB ஓட்டுநர்களுக்கு மட்டுமின்றி அவர்களைச் சார்ந்திருக்கும் குடும்பத்திற்கும் பிள்ளைகளுக்கும் பெரும் பயனாக இருக்கும் என்று அவர் கூறினார்.
அதுமட்டுமின்றி, பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு திட்டத்தை மேற்கொள்ள, இவ்வாண்டு சுமார் 5,000 ஓட்டுநர்களுக்கு, பி.டி.பி.கே எனப்படும் திறன் மேம்பாட்டு நிதிக் கழகத்தின் மூலம் அரசாங்கம் கடனுதவி வழங்குவதாக ரமணன் தெரிவித்தார்.
"5,000 ஓட்டுநர்களுக்கு பயிற்சிகள் வழங்குவார்கள். இந்த பயிற்சிக்கு மனிதவள அமைச்சு, பி.டி.பி.கே மூலம் கடனுதவியை அனைத்து ஓட்டுநர்களுக்கும் வழங்குவோம். எனவே, இதன் மூலம் அவர்களின் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும். மேலும், வாழ்வாதாரத்தைப் பெருக்கிக் கொண்டு அடுத்தக்கட்டத்திற்குச் செல்ல முடியும்", என்று அவர் கூறினார்.
இன்று, சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள Grab Malaysia நிறுவனத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அதனை கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)