Ad Banner
 பொது

பாதுகாப்பு ஓட்டுநர் பயிற்சி கட்டாயம்; போக்குவரத்து அமைச்சு பரிசீலனை

27/01/2026 03:32 PM

கோலாலம்பூர், ஜனவரி 27 (பெர்னாமா) -- குற்றப் பதிவுகள் அல்லது தற்காலிக தடை விதிக்கப்பட்டிருக்கும் ஓட்டுநர் உரிமம் கொண்ட ஓட்டுநர்களுக்கான பாதுகாப்பு ஓட்டுநர் பயிற்சியைக் கட்டாயமாக்குவதற்கு போக்குவரத்து அமைச்சு பரிசீலித்து வருகிறது.

உரிமம் பெறுவதற்கான தேர்வில் தேர்ச்சி அடைவது மட்டுமின்றி உண்மையான ஓட்டுநர் திறன்கள் மற்றும் விபத்தைத் தவிர்க்கு நுட்பங்களுக்கு முக்கியத்துவம் அளித்து தற்போதுள்ள பாடத்திட்டத்தை மேம்படுத்துவதும் அந்நடவடிக்கையில் உட்படுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

''இது ஒரு புதிய அணுகுமுறையாகும். இதை கட்டாயமாக்க அல்லது ஓட்டுநர் உரிமங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டவர்களை ஊக்குவிக்க நாங்கள் விரும்புகிறோம். அவர்கள் மீண்டும் பாதுகாப்பு ஓட்டுநர் படிப்புகளுக்குச் செல்ல வேண்டும் அல்லது மிகவும் கவனமாக வாகனம் ஓட்டுவது மற்றும் விபத்துகளைத் தவிர்ப்பது எப்படி என்பது குறித்த கல்வியை கற்றுக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.'' என்றார் அந்தோணி லோக்.

இன்று, மக்களவையில் மோட்டார் சைக்கிள் உரிமத்திற்கான தேர்வு பயிற்சி பாடத்திட்டத்தை மறுஆய்வு செய்வது தொடர்பான பரிந்துரை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு லோக் அவ்வாறு பதிலளித்தார்.

இதனிடையே, ஜனவரி 20-ஆம் தேதி நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு மற்றும் நெரிசல் குறித்த உயர் செயற்குழுக் கூட்டத்தின் விளைவாக பள்ளிக்கு மோட்டார் சைக்கிள்களில் செல்லும் பள்ளி மாணவர்களுக்கு எதிராக மேலும் இலக்கு வைக்கப்பட்ட தலையீடுகளைச் செயல்படுத்த போக்குவரத்து அமைச்சும் கல்வி அமைச்சும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)