கோலாலம்பூர், ஜனவரி 30 (பெர்னாமா) -- பதவியையோ அல்லது அதிகாரத்தையோ தவறாகப் பயன்படுத்தும் மற்றும் ஊழலில் ஈடுபடும் உயர்மட்ட தரப்பினர் உட்பட எந்தவொரு அரசாங்கப் பணியாளர்களிடமும் அரசாங்கம் சமரசம் காணாது.
கைது மற்றும் அதிகார மீறல் தொடர்பிலான அண்மைய விசாரணைகளைத் தொடர்ந்து அனைத்து விசாரணைகளும் முழுமையாகவும் வெளிப்படையாகவும் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்கு அமலாக்க அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று அரசாங்க தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் தெரிவித்தார்.
விசாரணைக்குப் பின்னர் சம்பந்தப்பட்ட பொதுசேவைத் துறையினர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் பரிந்துரைக்கப்பட்ட சட்ட நடைமுறைக்கு ஏற்ப நடவடிக்கை எடுப்பதில் அரசாங்கம் ஒருபோதும் சமரசம் காணாது என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி கூறினார்.
மேலும், பொது சேவையின் நம்பகத்தன்மைக்கு களங்கம் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் நாட்டின் முக்கிய நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை சிதைக்கக்கூடிய செயல்களைத் தவிர்ப்பதற்கும் அதிகார மீறல், ஊழல் மற்றும் தவறான நிர்வாகத்தை நிராகரிப்பது உள்ளிட்ட கொள்கை மிக முக்கியமானது என்றும் அவர் விவரித்தார்.
மடானி அரசாங்கத்தின் கொள்கைக்கு ஏற்ப தேசிய வருவாய் கசிவைக் குறைப்பதற்கும் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் உட்பட பொது சேவைக்கான அனைத்து சேவைகளும் பயனுள்ள மற்றும் மதிப்புமிக்கதாகவும் இருக்க வேண்டும் என்று டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி தமது ஆவலை வெளிப்படுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)