Ad Banner
Ad Banner
 பொது

பினாங்கில் கவனத்தை ஈர்த்த தங்க, வெள்ளி இரத ஊர்வலங்கள்

31/01/2026 05:12 PM

பினாங்கு, ஜனவரி 31 (பெர்னாமா) -- பினாங்கில் அழகன் முருகன் வீற்றிருக்கும் தங்க ரத ஊர்வலமும் அவனின் வேல் கம்பீரமாய் குடிக்கொண்டிருக்கும் வெள்ளி ரத ஊர்வலமும் அலையென திரண்ட மக்கள் கூட்டத்துடன் ஜாலான் கெபுன் புங்கா-வில் வீற்றிருக்கும் தண்ணீர்மலையான் ஆலயத்தில் இன்ரிறவு சென்றடையும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது.

2017-ஆம் ஆண்டு முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட தங்க இரத ஊர்வலத்திற்குப் பினாங்கில் ஆண்டுதோறும் தைப்பூச விழா களைக்கட்டி வருகிறது.

இன்று காலை மணி ஆறுக்கு லெபு குவின்  சாலையிலிருந்து ஜாலான் கெபுன் புங்கா-வில் உள்ள ஶ்ரீ அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்திற்கு இரதம் புறப்பட்டது.

இரத பவனி முழுவதும் ஆயிரக் கணக்கான பக்தர்களுடன் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுப் பயணிகளும் பொதுமக்களும் உடன் நடந்தனர்.

ஒரு மணிநேரத்திற்குப் பின்னர் 132 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வெள்ளி இரத ஊர்வலத்தின் பவனி பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த இரதம் லெபோ பினாங்கில் உள்ள நகரத்தார் கோயில் வீட்டிலிருந்து ஜாலான் அய்ர் தெர்ஜுன்-னில் உள்ள நாட்டுக்கோட்டை செட்டியார் ஆலயத்தை நோக்கிப் பயணித்தது.

பினாங்கு செட்டி பூச வெள்ளி மற்றும் தங்க ரத ஊர்வலத்தின்போது ஜாலான் மெகசின் மற்றும் ஜாலான் டாத்தோ கெரமட்-டில் லட்சக்கணக்கான தேங்காய்கள் குவிக்கப்பட்டிருந்தன.

இந்துக்கள் மட்டுமின்றி பிற இனத்தவர்களும் நேர்த்திக் கடனை நிறைவேற்றும் வகையில் அவை உடைக்கப்பட்டது அங்கு வந்திருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.

சுற்றுலாப் பயணிகளும் ஆவலுடன் ரத ஊர்வலத்திற்காக பல மணி நேரம் பொறுமையுடன் காத்திருந்து அதனைக் கண்டு மகிழ்ந்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)