Ad Banner
 பொது

வாஷிங்டனில் உள்ள இந்துக்கள் தைப்பூசத் திருநாளை விமரிசையாகக் கொண்டாடினர்

02/02/2026 08:03 PM

வாஷிங்டன், பிப்ரவரி 02 (பெர்னாமா) -- தைப்பூசத்தை முன்னிட்டு உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்கள் முருகப் பெருமானை வழிபட்டு பக்தி நெறியோடு தங்களின் நேர்த்திக் கடன்களைச் செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் அமெரிக்கா வாஷிங்டனில் உள்ள இந்துகள் தைப்பூசத் திருநாளை நேற்று விமரிசையாகக் கொண்டாடினர்.

அமெரிக்காவில் உள்ள இந்துக்களை ஒன்றிணைக்கும் விழாக்களில் இந்த தைப்பூச திருவிழாவும் ஒன்றாகும்.

அந்த வகையில் அமெரிக்கா, வாஷிங்டனில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஶ்ரீ முருகன் ஆலயத்தில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது.

ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜைக்குப் பின்னர் பக்தர்கள் காவடிகளையும் பால்குடங்களையும் ஏந்தியவாறு தங்களின் நேர்த்திக் கடனைச் செலுத்தினர்.

இதனிடையே அமெரிக்காவில் குளிர்காலம் நிலவி வருவதால் தைப்பூசத் திருவிழாவை இம்மாதம் 14ஆம் தேதிக்கு நடத்த ஆலய நிர்வாகம் திட்டமிட்டிருந்தது.

எனினும், கந்த பெருமானின் சித்தத்தால் பக்தர்களின் பிரார்த்தனையுடன் இவ்விழா நேற்றே சிறப்பாக நடைபெற்றது.

பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமானோர் இவ்விழாவில் கலந்து கொண்டு முருகனின் அருளாசியைப் பெற்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)