புத்ராஜெயா, பிப்ரவரி 03 (பெர்னாமா) -- நாடு முழுவதும் செயல்பாடு மற்றும் அமலாக்கத் தேவைகளை ஆதரிக்கும் முயற்சிக்குச் சுமார் 400 விசாரணை அதிகாரிகள், மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் ஏ.கே.பி.எஸ்ஸுக்குத் தேவைப்படுவதாக அதன் தலைமை இயக்குநர் டத்தோ ஶ்ரீ முஹமட் சுஹாய்லி முஹமட் சைன் தெரிவித்திருக்கிறார்.
எதிர்காலத்தில் விசாரணை மற்றும் வழக்குத் தொடுப்பதற்கான செயல்முறைகளைச் சுயமாகச் செயல்படுத்த ஏ.கே.பி.எஸ் விரும்புவதால் தேவைப்படும் விசாரணை அதிகாரிகளின் அந்த எண்ணிக்கை தொடக்கக்கட்ட மதிப்பீடாகும் என்று அவர் விளக்கினார்.
ஏ.கே.பி.எஸ் விசாரணை அதிகாரிகளின் செயல்திறனை மேம்படுத்த விசாரணை, செயல்பாடுகள் மற்றும் வழக்கு தொடுப்பதற்கான அம்சங்களில் அரச மலேசிய போலீஸ் படை பி.டி.ஆர்.எம்மின் நிபுணத்துவம் தேவை என்று முஹமட் சுஹாய்லி கூறினார்.
அதோடு, சட்டங்களை உருவாக்குவது தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்காகத் தற்போது ஏ.கே.பி.எஸ்ஸின் நான்கு அரசாங்க வழக்கறிஞர்கள் உள்ளதாக அவர் விவரித்தார்.
''எங்களுக்குச் சுமார் 400 விசாரணை அதிகாரிகள் தேவைப்படுகின்றனர். தற்போதுள்ள உறுப்பினர்களுக்குப் பயிற்சி வழங்குவது எனக்குச் சவாலாக உள்ளது. புதிய ஆட்சேர்ப்பு முறை விரைவில் மேற்கொள்ளப்படும். பி.டி.ஆர்.எம்மின் நிபுணத்துவம் தேவை என்பதை நான் கூறியிருந்தேன். ஏ.கே.பி.எஸ்ஸைக் குறுகிய காலத்தில் முதிர்ச்சியடையச் செய்வதற்குப் பி.டி.ஆர்.எம்மின் உதவி நம்பிக்கையாக உள்ளது. நாங்கள் சுயமாக விசாரித்து சுயமாக வழக்குத் தொடுக்க முடியும்'', என்றார் டத்தோ ஶ்ரீ முஹமட் சுஹாய்லி முஹமட் சைன்.
இன்று புத்ராஜெயாவில் உள்ள ஏ.கே.பி.எஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அதனை கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)