Ad Banner
 பொது

இழப்பீடு, நில பரிமாற்றம் அல்லது லாப நஷ்டம் ஆகியவற்றின் அடிப்படையில் மலேசியா - இந்தோனேசியா நில எல்லை நிர்ணயமல்ல

04/02/2026 06:34 PM

ஜாலான் பார்லிமன், பிப்ரவரி 04 (பெர்னாமா) -- மலேசியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான நில எல்லையை நிர்ணயிப்பது, பிரிட்டிஷ் மற்றும் நெதர்லாந்து அரசாங்கங்களுக்கு இடையில் கையெழுத்தான இரண்டு நில எல்லை ஒப்பந்தங்கள் மற்றும் ஒரு வரலாற்றுபூர்வ நில ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.

இழப்பீடு, நில பரிமாற்றம் அல்லது லாப நஷ்டம் ஆகியவற்றின் அடிப்படையில் அல்ல.

1891ஆம் ஆண்டு நில எல்லை ஒப்பந்தம் 1915ஆம் ஆண்டு எல்லை ஒப்பந்தம் மற்றும் 1928ஆம் ஆண்டு நில எல்லை ஒப்பந்தம் ஆகியவற்றின் வழியாக அது நிர்ணயிக்கப்பட்டதாகப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் எடுத்துரைத்தார்.

''சரவாக்கில் உள்ள ஒரு சிறிய துறைக்குப் பிரிட்டிஷ் மற்றும் நெதர்லாந்து அரசாங்கங்களுக்கு இடையிலான எல்லை ஒப்பந்தம் 1928ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் தேதி கையெழுத்தானது. தற்போது ஒரு பிரச்சனையாக இருக்கும் சினாபட் ஆறு, சேசாய் ஆகியவற்றின் எல்லைக் கோட்டை நிர்ணயிப்பது 1891ஆம் ஆண்டு நில எல்லை ஒப்பந்தம் மற்றும் 1915ஆம் ஆண்டின் எல்லை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது'', என்றார் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்.

1915ஆம் ஆண்டு எல்லை ஒப்பந்தத்தின்படி வட அகலாங்கு 4 டிகிரி 20 நிமிடம் என்ற கோட்டில் அமைந்துள்ள Sinapad ஆறு மற்றும் Sesai ஆற்றின் முகத்துவாரங்களின் இருப்பிடங்களை அடிப்படையாகக் கொண்டு அப்பகுதியின் எல்லை நிர்ணயிக்கப்பட்டதாக அன்வார் இப்ராஹிம் சுட்டிக்காட்டினார்.

அந்த ஒப்பந்தத்தின் படி அக்கோட்டிற்கு வடக்கே அமைந்துள்ள பகுதிகள் பிரிட்டிஷ் நார்த் போர்னியோ, சபா நிர்வாகத்தின் கீழும் அக்கோட்டிற்குத் தெற்கே உள்ள பகுதிகள் நெதர்லாந்து இந்தோனேசியா நிர்வாகத்தின் கீழும் இருந்தன.

நடைமுறையில் உள்ள ஒப்பந்தங்களுக்கு இணங்கவும் எல்லைத் துல்லியமாக நிர்ணயிக்கப்படுவதை உறுதி செய்யவும் மலேசியா மற்றும் இந்தோனேசியா இடையிலான அதிகாரப்பூர்வ எல்லை நிர்ணயப் பணிகள் 1977ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)