Ad Banner
 பொது

இணையக் குற்றச்செயல் சட்ட மசோதா; மார்ச்சில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்

04/02/2026 06:02 PM

ஜாலான் பார்லிமன், பிப்ரவரி 04 (பெர்னாமா) -- இணையக் குற்றச்செயல் சட்ட மசோதா வரும் மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டம் 563 அல்லது 1997ஆம் ஆண்டு கணினி குற்றச்செயல் சட்டத்திற்குப் பதிலாகப் பயன்படுத்தப்படவிருக்கும் அச்சட்ட மசோதவை தேசிய இணைய பாதுகாப்பு நிறுவனம் NACSA தற்போது இறுதிசெய்து வருவதாகத் துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

இணைய மோசடிகள் தொடர்ந்து கணிசமாக உயர்ந்து வரும் வேளையில் கடந்தாண்டில் 290 கோடி ரிங்கிட் இழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது 2024ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 157 கோடியே 40 லட்சம் ரிங்கிட்டைக் காட்டிலும் 86 விழுக்காடு அதிகமாகும்.

2025ஆம் ஆண்டு செப்டம்பர் வரை மட்டும் 191 கோடியே 90 லட்சம் ரிங்கிட் இழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் மேலும் கிட்டத்தட்ட 100 கோடி ரிங்கிட் இழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

''இச்சட்டம் முக்கியமானது காரணம் நாம் அதிகமான இணைய மோசடி சம்பவங்களைக் கண்டிருக்கிறோம். மேலும், இந்த ஆண்டு நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலும் இந்த மசோதாவை தாக்கல் செய்ய நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அந்த வகையில் இந்த மசோதா தற்போதுள்ள இடைவெளிகளை மூடுவதற்கும் விசாரணை மற்றும் வழக்குத் தொடருவதை வலுப்படுத்துவதற்கும் இலக்கவியலில் பயனீட்டாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மிகவும் முழுமையான, அண்மைய மற்றும் தொழில்நுட்ப-நடுநிலை அணுகுமுறையைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் என்று நான் கூற விரும்புகிறேன்'', என்றார் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி.

இன்று மக்களவையில் புறநகர் மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சிற்கு ஆற்றிய அரச உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாவதத்தை நிறைவு செய்யும்போது அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)