Ad Banner
 பொது

வெளிநாட்டுத் தொழிலாளர்களை நேரடியாக வேலைக்கு அமர்த்தும் முறை: மனிதவள அமைச்சின் முடிவிற்கு ‘மைக்கி’ வரவேற்பு

05/02/2026 05:37 PM

கோலாலம்பூர், பிப்ரவரி 05 (பெர்னாமா) -- வெளிநாட்டுத் தொழிலாளர்களை நேரடியாக வேலைக்கு அமர்த்தும் முறையை அறிமுகப்படுத்துவதற்கான மனிதவள அமைச்சின் முன்மொழிவை மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சங்கங்களின் சம்மேளனம், மைக்கி வரவேற்றுள்ளது.

 தழிலாளர் பற்றாக்குறை அதிகம் உள்ள துறைகள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் கட்டமைப்பு ரீதியான சவால்களைத் தீர்க்க இது ஒரு சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சீர்திருத்தம் என்று அது விவரித்துள்ளது.

கட்டுமானத் துறை, புனரமைப்பு, உணவுச் சேவை மற்றும் விருந்தோம்பல் போன்ற துறைகள் சட்டவிரோத முகவர்களால் பெரும் அழுத்தத்தைச் சந்தித்து வருவதாக மைக்கி தலைவர் டத்தோ ஸ்ரீ என்.கோபாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

குறிப்பாக, தொழிலாளர்கள் மலேசியா வருவதற்கு முன்பே விண்ணப்பங்களுக்காக இந்த முகவர்கள் அதிகப்படியான கட்டணங்களை வசூலிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

"சவால்களைத் தாங்கி மீண்டெழும் வல்லமையும், வருங்காலத் தேவைகளுக்கான தயார்நிலையும் கொண்ட ஒரு பொருளாதாரத்தைக் கட்டமைக்க மலேசியா இலக்கு கொண்டுள்ள போதிலும், களத்தில் முதலாளிகள் எதிர்கொள்ளும் யதார்த்தம் மிகவும் பலவீனமாக உள்ளது. பல வணிகங்கள் நிலையற்ற, அதிக செலவு பிடிக்கக்கூடிய மற்றும் நீடிக்க முடியாத ஒரு ஆள்சேர்ப்பு சூழலிலேயே இயங்கி வருகின்றன," என்று அவர் கூறினார்.

அதிக தொழிலாளர்கள் தேவைப்படும் துறைகளில் உள்ள முதலாளிகளுக்கு, நம்பகமான மற்றும் வெளிப்படையான முறையில் வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பெறுவது என்பது வெறும் செயல்பாட்டு விஷயம் மட்டுமல்ல; அது திட்டங்களின் தரம் மற்றும் வணிகத்தின் நிலைத்தன்மையைப் பாதிக்கும் ஒரு முக்கிய சவாலாகும் என்று டத்தோ ஸ்ரீ என். கோபாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

இதனிடையே, ஒரு வெளிநாட்டுத் தொழிலாளியை வேலைக்கு அமர்த்த முதலாளிகள் லெவி, விமானக் கட்டணம், மருத்துவப் பரிசோதனை மற்றும் நிர்வாகக் கட்டணம் எனப் பெரும் தொகையை முன்பணமாகச் செலவிடுகின்றனர் என்பதை மைக்கியின் மகளிர் பிரிவுத் தலைவி ஹேமலா ஏபி சிவம் சுட்டிக்காட்டினார்.

தொழிலாளர்கள் வேலையை விட்டு ஓடிவிடும்போதோ அல்லது கூடுதல் தினக்கூலி தருவதாகக் கூறி சட்டவிரோத துணை ஒப்பந்ததாரர்களால் ஈர்க்கப்படும்போதோ, முதலாளிகளின் இந்த முதலீடு வீணாகிறது. மேலும், ஆள்சேர்ப்புக் கட்டணங்கள் மற்றும் மறைமுகக் கட்டணங்கள் வணிகச் செலவை அதிகரிப்பதோடு, தொழிலாளர்களும் தங்கள் சொந்த நாடுகளில் பெரும் கடன் சுமையுடன் மலேசியா வருகின்றனர்.

"அரசாங்கத்தின் கோட்டா (Quota) முறைகளில் ஏற்படும் அடிக்கடி மாற்றங்கள், திடீர் முடக்கங்கள் மற்றும் லெவி கட்டமைப்பில் செய்யப்படும் மாற்றங்கள் ஆகியவை வணிகங்கள் நீண்டகால மனிதவளத் திட்டமிடலைச் செய்வதைக் கடினமாக்குகின்றன," என்று அவர் மேலும் கூறினார்.

இடைத்தரகர்களைத் தவிர்ப்பதன் மூலம் ஆள்சேர்ப்பு செலவு குறையும், காலதாமதம் தவிர்க்கப்படும் மற்றும் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என்பதால் இந்த நேரடி ஆள்சேர்ப்பு முறையை சங்கம் வரவேற்றுள்ளது.

"நேரடி ஆள்சேர்ப்பு முறை முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் பயனளிக்கும். வணிகங்களுக்கு இது ஒரு முறையான மற்றும் திறமையான ஆள்சேர்ப்பு செயல்முறையை வழங்கும். தொழிலாளர்களுக்கு இது சுரண்டலைக் குறைத்து அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்யும்," என்று ஹேமலா கூறினார்.

இந்த முன்மொழிவை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு முன், உள்துறை அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசிக்கும் மனிதவள அமைச்சின் முடிவிற்கு மைக்கி ஆதரவு தெரிவித்துள்ளது.

இறுதியாக, சட்டவிரோத ஆள்சேர்ப்பு முகவர்களுக்கு எதிராகக் கடுமையான அமலாக்க நடவடிக்கைகளை எடுக்குமாறும், வணிக வளர்ச்சி மற்றும் தொழிலாளர் நலனைப் பாதுகாக்கும் வகையில் இலக்கவியல் முறையிலான நேரடி ஆள்சேர்ப்பு கட்டமைப்பைச் செயல்படுத்துமாறும் மைக்கி கேட்டுக்கொண்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)