Ad Banner
 பொது

நாட்டின் பொருளாதார வியூக அடித்தளமாகத் திகழும் நேர்மை

05/02/2026 07:36 PM

கோலாலம்பூர், பிப்ரவரி 05 (பெர்னாமா) -- மலேசியாவின் பொருளாதார வியூக அடித்தளமாக நேர்மை திகழ்கிறது.

வலுவான ஆளுமை, நிறுவன அமைப்புகள் மற்றும் உறுதியான பொறுப்புக் கூறுகள் இன்றி நிலையான பொருளாதார வளர்ச்சி சாத்தியமில்லை என்பதையும் அது வலியுறுத்துவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

ஊழலை சகித்துக் கொள்ளாமல் நல்லுறவுக் கொண்டவர்களுக்கு சிறப்பு சலுகையின்றி சட்டம் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்படும் என்ற உறுதியின் அடிப்படையில் மட்டுமே பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கை வலுவாகும் என்றும் பிரதமர் நினைவுறுத்தினார்.

''ஊழலுக்கு எதிரான சகிப்புத்தன்மை இருக்காது. நல்லுறவு கொண்டவர்களுக்கும் விதிவிலக்குகளும் இருக்காது. பொறுப்புக்கூறுகள் இல்லாமல், நம்பகத்தன்மை இருக்க முடியாது. நம்பகத்தன்மை இல்லாமல், நிலையான வளர்ச்சி இருக்க முடியாது. இது தலைப்புச் செய்திகளுக்கான பிரச்சாரமோ அல்லது கடந்து செல்லும் கட்டமோ அல்ல. நீடித்த நம்பிக்கை சட்டம் அனைவருக்கும் சமமாகப் பொருந்தும் என்பதில் உறுதியாக உள்ளது என்பதை இது அங்கீகரிக்கிறது,'' என்றார் அவர்.

கழகங்களில் நேர்மையை உறுதி செய்ய, விதிகள் மற்றும் சீர்திருத்தங்கள் நீண்டகால நிலைத்தன்மையை வழங்க அனுமதிக்கும் வகையில் அரசாங்கம் நிறுவனங்களையும் வலுப்படுத்துவதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இன்று கோலாலம்பூரில், நடைபெற்ற 2026-ஆம் ஆண்டு மலேசிய பொருளாதார கலந்துரையாடலில், முதன்மை உரையாற்றும்போது, அவர் அவ்வாறு தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)