கூச்சிங், ஏப்ரல் 11 (பெர்னாமா) -- சிலாங்கூர், பத்து கேவ்சில் உள்ள ஒரு பராமரிப்பு மையத்தின் குழந்தைகள் சம்பந்தப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் அதற்கான காரணங்களை சட்டத்துறை தலைவர் அலுவலகத்திற்கு கொண்டு செல்வதற்கு முன்னர், மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு ஆய்வு செய்யும்.
இது தொடர்பாக மேல் நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்னர் நீதிமன்றம் வழங்கும் தண்டனைக்கான காரணங்களை ஆராய்வது அவசியமாகும் என்று அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ நேன்சி ஷுக்ரி தெரிவித்தார்.
"இவ்விவகாரத்தை அமைச்சு கடுமையாக கருதுகிறது. இதில் தொடர்புடையவர்களுக்கு நிச்சயம் உரிய தண்டனை வழங்கப்படும். விரைவில் இது தொடர்பிலான அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து அமைச்சு தீர்க்கமான முடிவை எடுக்கும்," என்றார் அவர்.
சரவாக் கூச்சிங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு தமது அமைச்சின் அதிகார வரம்பிற்கு உட்படவில்லை என்றும், சட்ட நடைமுறைக்கு இணங்க அது மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஐந்து சிறுவர்களுக்கு எதிராக உடல்ரீதியான மற்றும் உடல்ரீதியற்ற பாலியல் வன்கொடுமை மற்றும் இயற்கைக்கு முரணான இணைவு ஆகிய 15 குற்றச்சாட்டுகளை, சிறார்கள் பராமரிப்பு இல்லத்தின் பராமரிப்பாளர் 25 வயதான ரத்னவேலு கடந்த வியாழக்கிழமை அம்பாங் செஷன்ஸ் நீதிமன்றங்களில் ஒப்புக்கொண்டார்.
மற்றொரு நிலவரத்தில், சிறார்கள் பராமரிப்பு இல்லத்தின் உரிமையாளரான 31 வயதுடைய எஸ். வேலன், இரண்டு வெவ்வேறு நீதிமன்றங்களில் நான்கு குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணைக் கோரினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)