Ad Banner
 பொது

அனைத்துலகத் தமிழ்ச் சித்தர் மரபு மாநாடு 2026

05/02/2026 08:01 PM

மலாயாப் பல்கலைக்கழகம், பிப்ரவரி 05 (பெர்னாமா) -- தமிழர் பாரம்பரியத்தில் தொன்மையான சித்தர் நெறி குறித்த தெளிவான சிந்தனையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை முதன்முறையாக 2026 அனைத்துலகத் தமிழ்ச் சித்தர் மரபு மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. 

மறைந்து கிடந்த சித்தர்களின் தத்துவங்கள், மருத்துவ முறைகள் மற்றும் அவர்களின் ஞானச் செறிவினை இன்றைய தலைமுறையின் இதயங்களில் ஆழமாகப் பதியச் செய்வதே இம்மாநாட்டின் உன்னத நோக்கமாகும் என்று அனைத்துலக தமிழ் சித்தர் மரபு மாநாட்டுத் தலைவர் முனைவர் சில்லாழி கந்தசாமி கூறினார்.

வரும் பிப்ரவரி 27, 28ஆம் தேதியில் இருந்து மார்ச் முதலாம் தேதி வரை நடைபெறவுள்ள 2026 அனைத்துலகத் தமிழ்ச் சித்தர் மரபு மாநாடு 'சித்தாந்தம் அழியாத ஞானச் செல்வங்களின் காப்பு' எனும் கருப்பொருளில் நடத்தப்படுவதாக இந்திய ஆய்வியல் துறையின் மூத்த விரிவுரையாளர் முனைவர் சில்லாழி விவரித்தார்.

''சித்தர் நெறிகளை ஆய்வியல் மற்றும் அறிவியல் கண்ணோட்டத்தோடும், ஆன்மீகப் பூர்வமாகவும் அணுகுவதற்கான ஒரு மேடையாக இம்மாநாடு அமையும். இது மாணவர்களுக்கான களம் மட்டுமல்லாமல், சித்தர் மரபின் மீது பற்றுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பேராளர்கள் அனைவரும் ஒன்றிணைவதற்கான ஒரு வாய்ப்பாகவும் அமையும்'', என்றார் முனைவர் சில்லாழி கந்தசாமி.

இம்மாநாட்டின் சிறப்பம்சமாகப் பங்கேற்பாளர்கள் சித்தம் சார்ந்த தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை எழுதிப் படைப்பதற்கான அரிய வாய்ப்பு வழங்கப்படுவதாக இன்று மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

''இம்மாநாட்டில் ஆய்வியல் கட்டுரைகளைப் படைப்பதற்குத் தயார் செய்துள்ளோம். இதன் வழி, ஆய்வாளர்களையும் ஆன்மீகத்தில் பயிற்சியுடையவர்களையும் சித்தர் சார்ந்த கேள்விகள் கேட்கவே ஏற்பாடு செய்துள்ளோம்'', என்றார் முனைவர் சில்லாழி கந்தசாமி.

சித்தர் இலக்கியம், மருத்துவம், சமூகவியல் சிந்தனைகள் உள்ளிட்ட 8 வெவ்வேறு கருப்பொருள்களின் கீழ் தனித்தனி ஆய்வரங்கள் இடம்பெறும் என்பதை இந்திய ஆய்வியல் துறை தலைவர், முனைவர் ரவீந்திரன் மாரையா தெரிவித்தார்.

''சித்தர் இலக்கியம், மருத்துவம், சமூகவியல் சிந்தனைகள், மெய்ஞானக் கருத்துக்கள், நன்னெறி போதனைகள், யோகக் கலை மற்றும் யோகாசனம் உள்ளிட்ட எட்டு வெவ்வேறு கருப்பொருள்களில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படலாம். இதற்காக மலாயாப் பல்கலைக்கழகத்தின் ஆறாவது விரிவுரை அரங்கம் (Dewan Kuliah 6) மற்றும் ஆறு கருத்தரங்கு அறைகள் (Bilik Seminar) எனப் பிரத்யேகமான இடவசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன'', என்றார் முனைவர் ரவீந்திரன் மாரையா.

ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த ஆய்வியல் கட்டுரைகள் அனைத்தும் தமிழ் பேராய்வு எனும் ஆய்விதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

வெறும் ஆய்வரங்கமாக மட்டுமன்றி இசை மற்றும் கலை கலாச்சாரப் பண்பாட்டு விழுமியங்களைப் பேணிக் காக்கும் உன்னதத் தளமாகவும் இம்மாநாடு விளங்கும்.

உலகளாவிய ரீதியில் இதுவரை 650க்கும் மேற்பட்ட பேராளர்கள் இதற்காகப் பதிவு செய்துள்ள நிலையில் வரும் நாள்களில் இந்த எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, இம்மாநாட்டில் பங்கேற்க விரும்புவோர் மாநாடு நடைபெறும் நாள் வரை பதிவு செய்து கொள்ளலாம்.

ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிப்பவர்கள் வரும் பிப்ரவரி 13ஆம் தேதிக்குள் அதற்குப் பதிவு செய்ய வேண்டும் என முனைவர் ரவீந்திரன் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)