கோலாலம்பூர், 23 பிப்ரவரி (பெர்னாமா) -- ரமலான் மாதத்தை முன்னிட்டு, பயண நேரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொடர்ந்து அதன் உச்சநேர ரயில் சேவையை ரேபிட் ரெல் நிறுவனம் நீட்டித்துள்ளது.
காலை மணி 6.30 தொடங்கி காலை மணி 9.30 வரை, மற்றும், மாலை மணி நான்கு தொடங்கி இரவு மணி எட்டு வரை அது நீட்டிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
''இந்நடவடிக்கை சீரான சேவையை உறுதி செய்வதற்கும், பயணிகளின் வசதியை மேம்படுத்துவதற்கும், செயல்பாட்டுத் திறனை உறுதி செய்வதற்கும், குறிப்பாக நோன்புத் திறப்பதற்குத் தயாராவதற்கு முன்கூட்டியே திரும்பும் பயணிகளின் நடமாட்டத்தை நிர்வகிப்பதற்கும் செயல்படுத்தப்படுகிறது,'' என்றார் அவர்.
ரமலான் மாதத்தை முன்னிட்டு, பிரசரானா மலேசியாவின் துணை நிறுவனமான ரேபிட் ரெல் சேவை நேரத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனவா என்று, இன்று மக்களவையில் பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஷாரெட்சான் ஜொஹான் எழுப்பியக் கேள்விக்கு லோக் அவ்வாறு பதிலளித்தார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]