ஜார்ஜ்டவுன், 23 பிப்ரவரி (பெர்னாமா) -- ஞாயிற்றுக்கிழமை, பினாங்கு, ஜார்ஜ்டவுன், ஜாலான் பாயா தெருபோங்கில் உள்ள ஒரு பெட்ரோல் நிலைய வாகன நிறுத்துமிடத்தில், பல்வேறு பொருட்களால் நிரப்பப்பட்ட பெரோடுவா மைவி ரகக் காரில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
பூட்டப்பட்ட அக்காரை திறப்பதற்கான உதவிக்காக, இரவு மணி 7.48-க்கு தங்கள் தரப்பு அவசர அழைப்பைப் பெற்றதாக, பினாங்கு மாநில மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் முஹமட் ஷொக்கி ஹம்சா தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, பாயா தெருபோங் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக முஹமட் ஷொக்கி கூறினார்.
எனினும், பொருள்களால் நிரம்பி இருந்த அக்காரை திறப்பதற்கு அவர்கள் சிரமத்தை எதிர்நோக்கிய வேளையில், ஓட்டுநர் இருக்கையில் பெண் ஒருவர் சுயநினைவற்ற நிலையில் இருந்ததையும் கண்டனர்.
அப்பெண் உயிரிழந்து விட்டதை சுகாதார அமைச்சின் மருத்துவக் குழு உறுதிபடுத்தியது.
37 வயதான கொர் பீ ஜியுன் எனும் அப்பெண்ணின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறியும் பொருட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அவரின் உடல் பினாங்கு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]