Ad Banner
Ad Banner
 பொது

வரி, அபராதம் செலுத்தத் தவறியதாக ஆடவர் மீது 9 குற்றச்சாட்டுகள்

23/02/2026 06:49 PM

ஜார்ஜ்டவுன், 23 பிப்ரவரி (பெர்னாமா) -- 2021-இல் இருந்து 2024-ஆம் ஆண்டுகளுக்கு இடையிலான காலக்கட்டத்தில், சேவை வரி மற்றும் 38,362 ரிங்கிட் அபராதத்தைச் செலுத்தத் தவறியதாக துப்புரவு சேவை நிறுவனத்தின் இயக்குனர் ஒருவர் மீது ஒன்பது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

நீதிபதி இர்வான் சுனைபொன் முன்னிலையில் அக்குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டப் பின்னர், குற்றம் சுமத்தப்பட்ட 34 வயதான முஜிபுர் ரஹ்மான் ஹித்தயாத்துல்லா அதனை மறுத்து விசாரணைக் கோரினார்.

நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முஜிபுர் ரஹ்மான் சேவை வரியைச் செலுத்தத் தவறியது கண்டறியப்பட்ட நிலையில், 2018-ஆம் ஆண்டு சேவை வரிச் சட்டம் அல்லது சட்டம் 807-இன் கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

ஜார்ஜ்டவுன் நிலையம், அரச மலேசிய சுங்கத் துறை, உள்நாட்டு வரி பிரிவில் இக்குற்றங்களைப் புரிந்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 50,000 ரிங்கிட் அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை அல்லது அவ்விரண்டுமே விதிக்க வகைச் செய்யும் 2018-ஆம் ஆண்டு சேவை வரிச் சட்டம் செக்‌ஷன் 26(8)-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.

இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு வரும் மார்ச் 31-ஆம் தேதிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]