சென்னை, 26 பிப்ரவரி -- தமிழ்நாட்டின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான R. நல்லகண்ணு நேற்று காலமானதை அடுத்து அவரின் உடல், தியாகராயர் நகரில் இருக்கும் கட்சியின் மாநில அலுவலக இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின்னர், அவரின் உடல் இன்று, இந்திய நேரப்படி மாலை 4 மணியளவில் அரச மரியாதையுடன் மருத்துவ மாணவர்களின் ஆய்வு கல்விக்காக ஒப்படைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
80 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பயணித்த தமிழக மூத்த அரசியல் தலைவரான நல்லகண்ணு உடல் நலக்குறைவால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரது முக்கிய உடலுறுப்புகள் அனைத்தும் செயல் இழந்ததால், நேற்று பிற்பகலில் நல்லகண்ணு இயற்கை எய்தினார்.
101 வயதுடைய அவரின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், தமிழ் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நாட்டின் விடுதலைக்காக, சமூகத்தில் பின்தங்கியவர்களுக்காக, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்காக குரல் கொடுப்பதில் நல்லகண்ணு ஒரு போராளியாக நினைவுகூறப்படுவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமது X தளத்தில் பதிவிட்ட இரங்கலில் தெரிவித்துள்ளார்.
சமூகத்தின் ஒவ்வொரு பிரிவு மக்களாலும் பரவலாக மதிக்கப்பட்ட அவர் கட்சியின் மாதம் 2000 ரூபாய் ஊதியத்தில் வாழ்ந்து மறைந்த எளிய பண்பாளர் ஆவார்.
தமிழக அரசு வழங்கிய 'தகைசால் தமிழர்' விருதுக்கு கிடைத்த 10 லட்சம் ரூபாயுடன் தம்மிடம் இருந்த 5 ஆயிரம் ரூபாயையும் சேர்த்து முதலமைச்சர் நிவாரண நிதிக்குக் கொடுத்தது மற்றும் ஆய்வு கல்விக்காக தமது உடலை தானம் செய்தது போன்ற பெருமையுடன் நிறைவு பெறுகிறது 'நல்லகண்ணு' எனும் மாமனிதரின் வரலாறு.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)