பாகிஸ்தான், மார்ச் 07 - ஈரானில் ஏற்பட்ட மோதல் காரணமாக எண்ணெய் விலை உயர்ந்ததைக் காரணம் காட்டி, பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை டீசல் மற்றும் பெட்ரோலுக்கான பயனீட்டாளர் விலையை சுமார் 20 விழுக்காடு உயர்த்தியது.
டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 55 ரூபாய் விலையை 321.17 ரூபாயாகவும் பெட்ரோலுக்கு 335.86 ரூபாயாகவும் வரலாற்றில் மிக அதிக விலைக்கு உயர்த்துவதாகவும் பாகிஸ்தான் பெட்ரோலிய அமைச்சர் அலி பெர்வைஸ் மாலிக் அறிவித்தார்.
உலகளவில் பெட்ரோலிய விலை கடுமையாக உயர்ந்து வருவதால், கட்டாயத்தின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக Ali Pervaiz தெரிவித்தார்.
''விலை மாற்றம் தினசரி அடிப்படையில் மிகவும் நிலையற்றதாக உள்ளது. இனிமேல், நாங்கள் அதை வாராந்திர அடிப்படையில் மதிப்பாய்வு செய்து, இந்த முறையைத் தொடர்வோம். மக்களுக்கு எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக பாடுபடுவோம்,'' என்றார் அவர்.
இந்த முடிவு பணவீக்கத்தை அதிகரித்து பாகிஸ்தானின் வறிய நிலையிலான மக்களைப் பாதிக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
"கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களாக பெட்ரோல் விநியோகிக்கப்படவில்லை. இதனால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எங்களிடன் இருப்பதில் கிட்டத்தட்ட பாதி தீர்ந்து விட்டது. மேலும், பெட்ரோல் முற்றிலும் தீர்ந்து விட்டது. எங்களிடம் தற்போதுள்ள கையிருப்பு இன்னும் ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் வரை இருக்கலாம். ஆனால் அடுத்த விநியோகம் எப்போது வரும் என்பது குறித்து உறுதிப்படுத்தப்படுவதற்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்," என்று பெட்ரோல் நிலைய ஊழியரான முஹமட் சஹீர் என்பவர் தெரிவித்தார்.
"நிலைமை ஏற்கனவே கடினமாக உள்ளது. வணிகத்தில் சிரமத்தை எதிர்நோக்குகிறோம். மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். இந்த பணவீக்கத்தில், பெட்ரோல் விலை 55 ரூபாய்க்கு உயர்வு என்பது வெறும் எண் அல்ல, இது அனைத்தையும் விலை உயர்ந்ததாக மாற்றும். மக்கள் எப்படி எதிர்கொள்வார்கள்? அரசாங்கம் இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்," என்று உள்நாட்டைச் சேர்ந்த மற்றோர் ஆடவர் குறிப்பிட்டார்.
இந்த அறிவிப்புக்கு முன்னர், லாகூர் மற்றும் கராச்சி போன்ற முக்கிய நகரங்களில் உள்ள எண்ணெய் நிலையங்களில் எரிபொருள் நிரப்புவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)