ஜோகூர் பாரு, 9 மார்ச் (பெர்னாமா) -- மாநில மக்கள் தற்போதைய வாழ்க்கைச் செலவின அழுத்தங்களைச் சமாளிக்கவும், அவர்களின் நலன் தொடர்ந்து பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய, ஜோகூர் மாநில அரசாங்கம் பல்வேறு முயற்சிகளையும் சமூக ஆதரவையும் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.
அம்மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் முதன்மை முயற்சிகளில் BKJ எனப்படும் ஜோகூர் காசே உதவித் திட்டத்தை அமல்படுத்தப்படுவதும் ஒன்றாகும்.
இத்திட்டத்தினால், மாநிலத்தில் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த 500,000-க்கும் மேற்பட்ட மக்கள் இதுவரை, பயனடைந்துள்ளதாக ஜோகூர் மந்திரி புசார், டத்தோ ஓன் ஹஃபிஸ் காஸி தெரிவித்தார்.
குறிப்பாக, ஏழ்மை நிலை மற்றும் குறைந்த வருமானம் கொண்ட பிரிவினரை இலக்காக கொண்டு, மக்களின் வாழ்க்கைச் செலவினச் சுமையைக் குறைக்க உதவும் நோக்கில் BKJ-வை மாநில அரசாங்கம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
2026 ஜோகூர் வரவு செலவுத் திட்டத்தின் கீழ், BKJ-காக, கிட்டதட்ட 21 கோடியே 68 லட்சத்து 70 ஆயிரம் ரிங்கிட் ஒதுக்கீட்டிலான மொத்தம் 24 திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
விதிவிலக்கின்றி, பல்வேறு அடிப்படையிலான சுமார் 585,054 மக்களுக்கு பயனளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
"வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரித்திருப்பதால், மக்கள் கஷ்டமான சூழ்நிலையில் உள்ளனர். அதனால்தான், மக்கள் உணரும் சுமையைக் குறைக்க இந்த BKJ-ஐ நாங்கள் தீவிரமாக செயல்படுத்தி வருகிறோம். மேலும் அதிகமான மக்கள் இந்த உதவியைப் பெறுவதற்காக நாங்கள் தொடர்ந்து முயற்சிப்போம்." என்றும் அவர் கூறினார்.
ஜோகூர் மந்திரி புசாரின் அதிகாரப்பூர்வ இல்லமான சௌஜானாவில், பெர்னாமா தலைமை செய்தி ஆசிரியர் அருள் ராஜூ துரை ராஜ்-சின் தலைமையில் நடத்தப்பட்ட சிறப்பு நேர்காணலின்போது, ஓன் ஹஃபிஸ் அந்த விபரங்களைத் தெரிவித்தார்.
மக்களுக்கு உதவுவதற்காக மாநில அரசு மேற்கொண்ட நூற்றுக்கணக்கான திட்டங்களில் BKJ-வும் ஒரு பகுதியாகும்.
ஜோகூர் காசே விற்பனைத் திட்டம், போன்ற பிற முயற்சிகள், உணவுப் பொருட்கள், குறிப்பாக இறைச்சி, கடல் உணவுகள், காய்கறிகள் மற்றும் பழங்கள், நியாயமான விலையில் விற்கப்படுவதை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டிருக்கிறது.
RMMJ எனப்படும் ஜோகூர் மாநில மலிவு விலை வீடுகள் திட்டத்தின் மூலம், மலிவான குடியிருப்புகளை ஏற்படுத்தி தருவதில், மாநில அரசாங்கம் தீவிரம் காட்டி வருவதாகவும் ஓன் ஹஃபிஸ் சுட்டிக்காட்டினார்.
தேவைப்படுவோர், சொந்த வீடுகளை வாங்க உதவும் வகையில் கிட்டத்தட்ட 20,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு, உபகரணங்கள் வாங்குதல் மற்றும் வைப்புத்தொகை செலுத்துதல் போன்ற வீடு வாங்குதல் தொடர்பான செலவுகளை ஈடுகட்ட 2,000 ரிங்கிட் கூடுதல் மானியத்துடன், கூடுதலாக 5,000 ரிங்கிட் உதவித் தொகையையும் மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
"மக்களின் சுமையைக் குறைக்க நாங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். வாழ்க்கைச் செலவின அழுத்தத்தைக் குறைப்பது, மாநில அரசின் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது," என்றும் ஓன் ஹஃபிஸ் கூறினார்.
மக்கள் எளிதாகவும், தரமானதாகவும் சுகாதார அணுகலைப் பெறும் வகையில், சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனை மற்றும் கெலாங் பாத்தா பகுதிகளில் புதிய மருத்துவமனைகளைக் கட்டுவது உட்பட, சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளுக்கும் மாநில அரசு உதவிகளை வழங்கி வருகிறது.
இதனிடையே, கல்வித் துறையில், ஜோகூரில் உள்ள ஒவ்வொரு பள்ளிக்கும் ஆசிரியர் அறை வசதிகளை மேம்படுத்த மாநில அரசு ஆண்டுக்கு ஏறக்குறைய 5,000 ரிங்கிட்டை ஒதுக்கியிருக்கிறது.
சேதமடைந்த சாலைகள், வடிகால் அடைப்பு, செயல்படாத தெருவிளக்குகள் மற்றும் பிற உள்கட்டமைப்பு பிரச்சனைகள் உள்ளிட்ட அடிமட்ட மட்டத்தில் மக்கள் எழுப்பும் விவகாரங்களுக்கும் மாநில அரசு கவனம் செலுத்தி வருகிறது.
அவற்றை முடிந்தவரை திறமையாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஓன் ஹஃபிஸ் தெரிவித்தார்.
அண்மையில், 18,455 மாநில நிரந்தர மற்றும் ஒப்பந்த அரசு ஊழியர்களுக்கு, 2026 நோன்புப் பெருநாள் சிறப்பு உதவித் தொகையாக ஒரு மாத சம்பளத்தை மாநில அ அரசாங்கம் அறிவித்திருந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)