Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

சிலாங்கூரில் தீவிர சோதனை நடவடிக்கை; 200 கிலோவுக்கும் மேலான போதைப் பொருள் பறிமுதல்

11/03/2026 03:56 PM

ஷா ஆலம், 11 மார்ச் (பெர்னாமா) --  இம்மாத தொடக்கத்தில், சிலாங்கூர் மாநிலத்தில் சில பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் மூலம் போதைப்பொருள் கடத்தலை உட்படுத்திய இரு கும்பல்களைப் போலீசார் முறியடித்ததோடு, 200 கிலோகிராமுக்கும் அதிகமான ஷாபு மற்றும் கஞ்சா பூக்களையும் கைப்பற்றினர்.

முதல் சம்பவத்தில், கடந்த மார்ச் 3-ஆம் தேதி தொடங்கி, மூன்று தொடர் கைது நடவடிக்கைககளில் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட ஒரு பெண் உட்பட நான்கு ஐரோப்பா கண்டத்தைச் சேர்ந்த அந்நிய நாட்டினர் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் தெரிவித்தார்.

விமான நிலைய முனையத்தில், போதைப் பொருள் கடத்தல்காரர் என்று நம்பப்படும் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்நடவடிக்கை தொடங்கியதாக டத்தோ ஷாசெலி கூறினார்.

வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படவிருப்பதாக நம்பப்படும் 27.2 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா பூக்கள் என சந்தேகிக்கப்படும் உலர்ந்த இலைகளைக் கொண்ட 49 நெகிழிப் பொட்டலங்களைக் கொண்ட ஒரு பயணப் பெட்டியும் அந்நபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதை அவர் உறுதிப்படுத்தினார்.

மறுநாள், கோத்தா வரிசான் சுற்றுவட்டாரத்தில் உள்ள வீடொன்றில் அக்கும்பலின் மூளையாகச் செயல்பட்டு வருவதாகக் கருதப்படும் மற்றொரு அந்நிய நாட்டினரையும் போலீசார் கைது செய்தனர்.

''சம்பந்தப்பட்ட வளாகத்தில் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட சோதனையில் கஞ்சா பூக்கள் என சந்தேகிக்கப்படும் உலர்ந்த இலைகள் அடங்கிய 25 நெகிழிப் பொட்டலங்கள் அடங்கிய ஒரு பயணப் பெட்டி பறிமுதல் செய்யப்பட்டது. அதன் எடை சுமார் 14.3 கிலோவாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது'', என்றார் அவர்.

இன்று, ஷா ஆலமில் உள்ள சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் அத்தகவல்களை வழங்கினார்.

மற்றொரு நிலவரத்தில், பூச்சோங், தாமான் கின்ராரா குடியிருப்புப் பகுதியில் நேற்றும் இன்றும் நிகழ்ந்த வாகனங்கள் எரிப்பு மற்றும் கொலை மிரட்டல் தொடர்பான விசாரணையில் போலீசார் சில நேர்மறையான தடயங்களைப் பெற்றுள்ளதாக டத்தோ ஷாசெலி கஹார் தெரிவித்தார்.

எவ்வித துன்புறுத்தலுமின்றி, அனைத்து தரப்பினருக்கும் வெளிப்படையாகவும் நியாயமாகவும் விசாரணை நடத்தப்படும் என்று தமது தரப்பு உறுதியளித்ததாகவும் அவர் கூறினார்.

குறிப்பாக மதம், அரசக் குடும்பம் மற்றும் இனம், 3R தொடர்பான விவகாரங்கள் குறித்த ஊகங்கள் மற்றும் வதந்திகளை மக்கள் நிறுத்தும்படியும் ஷாசெலி அறிவுறுத்தினார்.

''எந்தவொரு 3R பிரச்சனையையும் உருவாக்கி பரப்புவதில் ஈடுபட்டுள்ள எந்தவொரு தரப்பினருடனும் அரச மலேசிய போலீஸ் படை, (பி.டி.ஆர்.எம்) சமரசம் செய்யாது என்று நான் கடுமையாக எச்சரிக்கிறேன்'', என்று அவர் கூறினார்.

கடந்த மார்ச் 9 மற்றும் 10-ஆம் தேதிகளில், பூச்சோங், தாமான் கின்ராரா குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்த வாகனங்கள் எரிப்பு மற்றும் கொலை மிரட்டல் தொடர்பாக போலீசார் மூன்று விசாரணை ஆவணங்களைத் திறந்துள்ளதாகவும் ஷாசெலி தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)