Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

துங்கு மக்கோத்தா இஸ்மாயிலை, ஜோகூர் மக்கள் ஒரு சக்திவாய்ந்த தலைவராக அறிந்துள்ளனர் - ஓன் ஹஃபிஸ்

11/03/2026 07:10 PM


ஜோகூர் பாரு, 11 மார்ச் (பெர்னாமா) -- சமூகம், குறிப்பாக ஜோகூர் மக்கள், இடைக்கால ஜோகூர் சுல்தான் துங்கு மக்கோத்தா இஸ்மாயிலை, மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதில் உறுதியாக உள்ள ஒரு நம்பகமான தலைவராக அறிந்திருப்பதாக ஜோகூர் மந்திரி புசார் டத்தோ ஓன் ஹஃபிஸ் காஸி நம்பிக்கை தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்ட கால்பந்து பிரச்சனை தொடர்பான சலசலப்பின்போது, துங்கு மக்கோத்தா இஸ்மாயில் மீது பல்வேறு கருத்துகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

ஆனால், இம்மாநில மக்கள் அவரது உண்மையான தலைமைத்துவத்தையும் தொலைநோக்குப் பார்வையையும் அறிந்திருந்தனர் என்றும் அவர் கூறினார்.

"இன்றைய உலகின் யதார்த்தம் இதுதான். சமூக ஊடகங்கள், அனைவரும் பேசுவதற்கான ஓரு இடத்தை வழங்குகிறது. இருப்பினும், துங்கு மக்கோத்தா இஸ்மாயில் உண்மையில் யார் என்பதை ஜோகூர் மக்கள் அறிவார்கள் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் நேற்று தமது புகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

ஜோகூர் டாருல் தக்சிம், ஜே.டி.தி குழுவின் செயல்திறனுக்காக துங்கு மக்கோத்தா இஸ்மாயில் எப்போதும் உயர் தரங்களை நிர்ணயிப்பார்.

அதோடு, அதே தரநிலைகள் நிர்வாகக் செயற்குழு மற்றும் ஜோகூர் மாநில நிர்வாக அதிகாரி, ஜே.சி.எஸ் உள்ளிட்ட மாநிலத் தலைமைத்துவத்திற்கும் பொருந்தும் என்றும் ஓன் ஹஃபிஸ் கூறினார்.

"மந்திரி புசார் என்ற முறையில், துங்கு மக்கோத்தா இஸ்மாயிலின் பல முயற்சிகள், ஜோகூர் மிகவும் வளர்ச்சியடைந்த, போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் அதன் மக்கள் சிறந்த வாழ்க்கையை அனுபவிப்பதைக் காண வேண்டும் என்ற தெளிவான எண்ணத்திலிருந்து பிறந்தன என்பதை நான் நேரில் கண்டிருக்கிறேன்," என்றும் அவர் தெரிவித்தார்.

கல்வித் துறையில், இளைய தலைமுறையினருக்கு தரமான கல்வி மூலம் ஜோகூரின் எதிர்காலம் கட்டமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் அடிக்கடி வலியுறுத்தியதாகவும் ஓன் ஹஃபிஸ் விவரித்தார்.

''அதனால்தான், கல்வியில் சிறந்து விளங்குவதோடு மட்டுமல்லாமல், உலக அளவில் போட்டியிடும் தலைமைத்துவத்தையும் தன்னம்பிக்கையையும் கொண்ட ஜோகூர் குழந்தைகளின் தலைமுறையை உருவாக்குவதற்காக, பங்சா ஜோகூர் முன்னோடி பள்ளி எனும் யோசனை பிறந்தது.

"துங்கு மக்கோத்தா இஸ்மாயில் இளைஞர் மையம், TMIYC மற்றும் தெற்கு தன்னார்வலர்கள் இயக்கம் மூலம், பேரிடர் மற்றும் அவசரகால சூழ்நிலைகளின் போது சமூகத்திற்கு உதவ ஜோகூரைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஒன்றிணைக்க முடிந்தது," என்று அவர் கூறினார்.

பொருளாதாரத் துறையில், ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம், JS-SEZ வளர்ச்சிக்கு ஏற்ப, ஜோகூர் இளைஞர்களுக்கு அதிகமான ஊதியம் வழங்கும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் தரமான முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சிகள் உட்பட, மாநிலத்தின் முன்னேற்றம் மக்களுக்கு உண்மையான நன்மைகளை வழங்க வேண்டும் என்று துங்கு மக்கோத்தா இஸ்மாயில் வலியுறுத்தியுள்ளார்.

பல்வேறு தரப்பினரின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் விளைவாக தீவிர வறுமையை ஒழிப்பதில் ஜோகூர் வெற்றி பெற்றதன் மூலம் ஒரு முக்கியமான சாதனையைப் பதிவு செய்ததாக ஓன் ஹஃபிஸ் சுட்டிக்காட்டினார்.

"ஜோகூர் வெள்ளிக்கிழமை இன்ஃபாக் தொடர்பான யோசனை. இப்போது ஒவ்வொரு வாரமும் லட்சக்கணக்கான மக்களுக்கு பயனளிக்கிறது. துங்கு மக்கோத்தா இஸ்மாயிலின் ஏழைகள் மீதான அக்கறையைக் காட்டுகிறது என்பது பலருக்குத் தெரியாது. இது அரிதாகவே பேசப்படும் ஒரு பக்கம்," என்றும் அவர் கூறினார்.

"எந்தவொரு முதிர்ந்த சமூகத்திலும் கருத்து வேறுபாடுகள் இயல்பானவை. இருப்பினும், ஒரு விஷயத்திற்காக நாம் பிளவுபட அனுமதிக்கக் கூடாது. ஜோகூர் இன்று இருக்கும் இடத்தில், நாம் ஜோகூர் மக்களாக ஒன்றாக இணைந்து செல்ல வேண்டும்."

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502

 KEYWORDS
 தொடர்புடைய செய்திகள்
 பரிந்துரை