புத்ராஜெயா, 11 மார்ச் (பெர்னாமா) -- கடந்த திங்கட்கிழமை, புத்ராஜெயாவில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 5,569 ரிங்கிட் 20 சென் மதிப்பிலான பாக்கெட் சமையல் எண்ணெய் கொண்ட 78 பெட்டிகளை, உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு, கே.பி.டி.என் பறிமுதல் செய்தது.
செல்லுப்படியாகும் உரிமம் இல்லாமல், வணிகம் நடத்துவதற்காக இரண்டு மாடி வீட்டில் கட்டத்தப்பட்ட பொருள்களை சட்டவிரோதமாக சேமித்து வைத்திருப்பதாக, போலீசாருக்குக் கிடைத்த புகாரைத் தொடர்ந்து, அச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாக, கே.பி.டி.என்-னின் அமலாக்கத் துறை தலைமை இயக்குநர் டத்தோ அஸ்மான் அடாம் கூறினார்.
வீட்டைச் சுற்றி வேலி அமைக்கப்படாததாகவும், அங்கு மக்கள் நடமாட்டம் இல்லை என்றும், இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் டத்தோ அஸ்மான் குறிப்பிட்டிருந்தார்.
ஒவ்வொரு பெட்டியில் ஒரு கிலோகிராம் எடைக் கொண்ட 17 பாக்கெட்டிலான சமையல் எண்ணெய் வைக்கப்பட்டிருந்த நிலையில், மொத்தம் 1,326 கிலோகிராம் எடைக் கொண்ட 78 பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், சோதனை மேற்கொண்ட பகுதிக்கு உள்ளூர் ஆடவர் ஒருவர் வந்ததாகவும், அவர் வளாக உரிமையாளரின் மகன் என்று ஒப்புக்கொண்டதாகவும் அஸ்மான் கூறினார்.
1961-ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டம், சட்டம் 122, செக்ஷன் 21 உடன் வாசிக்கப்பட்ட 1974-ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டு விதிமுறைகள், விதிமுறை 3(1) இன் கீழ்-இவ்வழக்கு விசாரிக்கப்படுகின்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)