Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

HSA-வில் ஏற்பட்ட மனதைத் தொடும் தருணம், வறுமையை துடைத்தொழிக்க வேண்டும் என்ற உறுதியை ஓன் ஹஃபிஸ்-க்கு கொடுத்தது  

11/03/2026 08:20 PM

ஜோகூர் பாரு, 11 மார்ச் (பெர்னாமா) -- சுல்தானா அமினா மருத்துவமனை, HSA-க்கு திடீர் வருகை மேற்கொள்வது ஜோகூர் மந்திரி புசார் டத்தோ ஓன் ஹஃபிஸ் காஸிக்கு வழக்கமான ஒன்றாகும்.

ஆனால், சக்கர நாற்காலியில் இருந்த பெண் ஒருவரைப் பார்த்த தருணம், தாம் மாநிலத்தை வழிநடத்திய காலக்கட்டத்தில் நிகழ்ந்த மிகவும் நெகிழ்ச்சியான நினைவுகளில் ஒன்றாக தமது நினைவில் பதிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் அணையாடை வேண்டும் என்று அப்பெண் வைத்த கோரிக்கை, தமது தலைமைத்துவ உள்ளுணர்வைத் தொட்டது மட்டுமல்லாமல், ஒரு சிலர் இன்னும் எதிர்கொள்ளும் கஷ்டங்களின் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளவும் தமது கண்களைத் திறந்ததாக ஓன் ஹஃபிஸ் கூறினார்.

"அந்தப் பெண் தூரத்திலிருந்து என்னைக் கூப்பிட்டாள், நான் அவளிடம் சென்று அவள் எப்படி இருக்கிறாள் என்று கேட்டேன். நான் என்ன உதவி செய்ய முடியும் என்று கேட்டேன், அவள் அணையாடை தேவை என்று சொன்னாள்.

"எனது இதயத்தில் ஒரு கேள்விக்குறியை ஏற்படுத்தியது, இன்னும் வேறு எத்தனை ஜோகூர் மக்கள் இந்நிலையில் இருக்கிறார்கள்? மக்கள் நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள். அவர்களால் அணையாடையைக் கூட வாங்க முடியவில்லை. ஒரு தலைவராக நான் மிகவும் நெகிழ்ச்சியடைந்தேன்," என்று ஜோகூரை வழிநடத்திய நான்கு ஆண்டுகளில் மிகவும் நெகிழ்ச்சியான தருணங்கள் மற்றும் நினைவுகள் குறித்து கேட்டபோது அவர் கூறினார்.

அண்மையில், ஜோகூர் மந்திரி புசாரின் அதிகாரப்பூர்வ இல்லமான சௌஜானாவில், பெர்னாமா தலைமை செய்தி ஆசிரியர் அருள் ராஜூ துரை ராஜ்-சின் தலைமையில் நடத்தப்பட்ட சிறப்பு நேர்காணலின்போது, ஓன் ஹஃபிஸ் தெரிவித்தார்.

ஜோகூரில் வறுமையை ஒழிப்பதற்கான தனது முயற்சிகளைத் தொடர்ந்து அதிகரிக்க, அச்சம்பவம் தமக்கு ஓர் உந்துதலாக அமைந்தது என்றும், இதுபோன்ற அடிப்படைத் தேவைகள் மக்களுக்கு ஒரு சுமையாக இருக்கக்கூடாது என்றும் ஓன் ஹஃபிஸ் சுட்டிக்காட்டினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மாநில அரசின் தொடர்ச்சியான முயற்சிகளின் விளைவாக சுழியம் விகித வறுமையை அடைவதில் வெற்றி பெற்றுள்ளது.

தற்போது 4,000-க்கும் மேற்பட்ட ஏழைகள் மீது கவனம் செலுத்துவதன் மூலம் இந்த நடவடிக்கை தொடரும் என்றும் ஓன் ஹஃபிஸ் கூறினார்.

பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்பை உள்ளடக்கிய ஒரு விரிவான அணுகுமுறை மூலம் வறுமையை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்ற ஜோகூர் சுல்தான் துங்கு மக்கோத்தா இஸ்மாயிலின் உத்தரவுக்கு இணங்க, இந்த அணுகுமுறை உள்ளதாகவும் அவர் விவரித்தார்.

ஏப்ரல் மாதத்தில் 5,000-க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்கள், முற்றிலுமாக வறிய நிலையில் இருந்து மீட்கப்பட்டதாக ஓன் ஹஃபிஸ்  கடந்த நவம்பரில் அறிவித்தது,  மாநில அரசுக்கு கிடைத்த வெற்றியாகும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)