ஈரான், 12 மார்ச் (பெர்னாமா) -- ஈரானின் நியாயமான உரிமைகளை அங்கீகரிப்பது, இழப்பீடுகளை வழங்குவது மற்றும் எதிர்கால ஆக்கிரமிப்புக்கு எதிரான உறுதியான அனைத்துலக உத்தரவாதங்கள் ஆகியவையே அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி என்று ஈரானிய அதிபர் மசூத் பெஷேஷ்கியன் தெரிவித்தார்.
வட்டார அமைதிக்கான ஈரானின் உறுதிப்பாட்டை அவர் அவ்வாறு தமது X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, நேற்று புதன்கிழமை, பெஷேஷ்கியன் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்புடன் தொலைபேசி உரையாடலில் வட்டார மேம்பாடுகள் குறித்து விவாதித்தார்.
ஈரான் வட்டாரத்தில் உள்ள நாடுகளுடன் மோதலை விரும்புவதில்லை என்றும், அதன் எல்லைக்குள் தாக்குதல்களை நடத்தப் பயன்படுத்தப்படும் தளங்களை மட்டுமே குறிவைக்கும் என்றும் கூறிய அவர், அதை தங்கள் தற்காப்புக்கான சட்டபூர்வ உரிமை என்று விவரித்தார்.
மேலும், ஈரானுக்கு எதிரான திணிக்கப்பட்ட போர் மற்றும் இராணுவ ஆக்கிரமிப்புக்கான காரணங்களை அனைத்துலகச் சமூகம் கவனிக்கத் தவறினால் உலகளாவிய பாதுகாப்பு நிலையற்றதாகிவிடும் என்று அவர் எச்சரித்தார்.
ஈரானின் முற்றுகையிடப்பட்ட பகுதியில் மேலும் மூன்று கப்பல்கள் தாக்குதலுக்கு ஆளானதால், எண்ணெய் விலை பீப்பாய்க்கு 200 அமெரிக்க டாலரை எட்டுவதற்கு உலகம் தயாராக இருக்க வேண்டும் என்று ஈரான் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
இவ்வார தொடக்கத்தில் அதிகரித்த எண்ணெய் விலை தற்போது குறைந்துள்ளதோடு, பங்குச் சந்தையும் மீண்டும் உயர்ந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு முன்பு இஸ்ரேலுடன் இணைந்து தொடங்கிய இப்போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான விரைவான வழியைக் கண்டுபிடிப்பார் என்ற நம்பிக்கையில் முதலீட்டாளர்கள் இருக்கின்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)