கோலாலம்பூர், 15 மார்ச் (பெர்னாமா) -- கிளந்தான் கோத்தா பாருவில் உள்ள சுல்தான் இஸ்மாயில் பெத்ரா விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், அந்த விமான நிலையம் மார்ச் 16-ஆம் தேதி தொடங்கி முழுமையாக செயல்படவுள்ளது.
புதிய முனையத்தின் விரிவாக்கம், விமான நிலையத்தின் கொள்ளளவு ஆண்டுக்கு 15 லட்சத்தில் இருந்து 40 லட்ச பயணிகளாக அதிகரித்துள்ளது.
2025-ஆம் ஆண்டில் பயணிகளின் எண்ணிக்கை 17 லட்சமாக பதிவு செய்யப்பட்டது.
இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 16.2 விழுக்காடு அதிகமாகும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் விளக்கினார்.
பெரிய முனையக் கட்டிடம், பயணிகளின் நடமாட்டத்தை சீராக்க புறப்பாடு மற்றும் வருகை பகுதிகளைப் பிரித்தல் மற்றும் வாடகை கார், பேருந்து மற்றும் இ-ஹெய்லிங் சேவைக்காக பிரத்யேக பகுதி ஆகியவை சுல்தான் இஸ்மாயில் பெத்ரா விமான நிலையத்தில் மேம்படுத்தப்பட்ட வசதிகளில் அடங்கும்.
இந்த மேம்பாடு, குறிப்பாக பண்டிகைக் காலத்திற்கு முன்னதாக விமான நிலையத்தின் சீரான செயல்பாட்டிற்கு உதவுவதோடு, கிளந்தான் மாநிலத்திற்கான விமான இணைப்புகளை வலுப்படுத்தவும் உதவுகின்றன.
தற்போது, இந்த விமான நிலையத்தில் ஐந்து விமான நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)