Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

பாதுகாப்பான தயாரிப்புகள், நம்பிக்கையான பயனீட்டாளர்

15/03/2026 06:48 PM

கோலாலம்பூர், 15 மார்ச் (பெர்னாமா) --  ஒரு பொருளை அல்லது சேவையை குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து, அதனைப் பெற்று பயன்படுத்தும் பயனீட்டாளர்கள், தங்களின் உரிமையும் நலனும் பாதுகாக்கப்படுவதை உறுதிச் செய்ய வேண்டும்.

பயனீட்டாளரின் ஒவ்வொரு உரிமைகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டு, அவை தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உணர்த்தவே ஆண்டுதோறும் மார்ச் 15-ஆம் தேதி அனைத்துலக பயனீட்டாளர் உரிமைகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

பொருட்களை விலை கொடுத்து வாங்கும் மக்கள் பல்வேறு நிலைகளில் ஏமாற்றப்படுகின்றனர்.

அலாதியான ஆர்வத்தில், நேரடியாகவும் இணையத்திலும் குறைந்த விலையில் பொருட்களை வாங்கி பல பிரச்சனைகளை மக்கள் எதிர்நோக்குவதாக, பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் ஆய்வு மற்றும் கல்வி பிரிவு அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.

பாதுகாப்பு மற்றும் தகவல் வெளிப்படைத்தன்மை கொண்டு தயாரிக்கப்படும் பொருள்களின் மீதே பயனீட்டாளர்கள் அதிக நம்பிக்கை கொள்வதாகவும், அவை தவறும் பட்சத்தில் அதனை கேட்பதற்கான உரிமைகள் அவர்களிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

''எந்தவொரு பயனுமில்லாமல் பொருள்களைத் தயாரித்து, பயனீட்டாளர்களிடம் இருந்து பணத்தைப் பெறுவது நல்லது அல்ல. ஆகவே, பயனீட்டாளர்களுக்குப் பாதுகாப்பான பொருள்கள், குறிப்பாக, குழந்தைகளுக்கான பொருள்களைத் தயாரிப்பதில் இருக்கும் பாதுகாப்பு. உதாரணமாக, குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் அல்லது காலில் அணியும் காலணிகள் பாதுகாப்பானதாகவும், தரமானதாகவும் இருக்கின்றதா'', என்றார் அவர்.

அதேவேளையில், பயனீட்டாளர் கல்வி, விவரம் கேட்டல், பாதுகாப்பு உள்ளிட்ட உரிமைகளைப் பயனீட்டாளர்கள் கொண்டிருப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் இத்தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுவதாக அவர் கூறினார்.

''உரிமைகளுக்காக பயனீட்டாளர்களுக்கு உருவாக்கப்பட்ட இந்த தினத்தில், பயனீட்டாளர்களுக்குத் தயாரிக்கப்பட்ட பொருள்கள் பாதுகாப்பானதாக இருக்கின்றதா. வாங்கும் பொருள்கள் அரசாங்கம் அங்கீகாரம் பெற்ற முத்திரையைக் கொண்டிருக்கின்றதா. கலாவதியான தேதி அதில் உள்ளதா போன்ற விவரங்களைப் பயனீட்டாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்'', என்று அவர் கூறினார்.

அதுமட்டுமின்றி, அடிப்படைத் தேவைகள் பெறும் உரிமை, பாதுகாப்பு, இழப்பீடு, ஆரோக்கியமான சுற்றுச் சூழல் என உலகெங்கிலும் உள்ள பயனீட்டாளர்களுக்கென உருவாக்கப்பட்ட எட்டு உரிமைகள் குறித்தும் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

'பாதுகாப்பான தயாரிப்புகள், நம்பிக்கையான பயனீட்டாளர்' என்ற கருப்பொருளில் இவ்வாண்டு அனைத்துலக பயனீட்டாளர் உரிமைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)