கோலாலம்பூர், 21 மார்ச் (பெர்னாமா) -- பிறந்திருக்கும் ஷவால் முதல் நாளை வரவேற்று நாடெங்கிலும் உள்ள பள்ளிவாசல்களில் நன்றியுணர்வும் கொண்டாட்டமும் நிறைந்த சூழலில் முஸ்லீம்கள் தங்களின் நோன்புப் பெருநாள் தொழுகையை மேற்கொண்டனர்.
நோன்புப் பெருநாள் சமய சொற்பொழிவைக் கேட்கவும் தொழுகையை மேற்கொள்ளவும், காலை மணி ஏழு தொடங்கியே அவர்கள் ஒன்று கூடிய செய்தி தொகுப்பு தொடர்ந்து இடம் பெறுகின்றது.
பேராக், கோலா கங்சாரில் பள்ளிவாசலில் சுமார் 2,000 முஸ்லீம் அன்பர்களுடன் அம்மாநில சுல்தான் சுல்தான் நஸ்ரின் ஷா நோன்புப் பெருநாள் தொழுகையை மேற்கொண்டார்.
அதேபோல, பெர்லிஸ், இஸ்தானா அராவ் பள்ளிவாசலில் 2,000-க்கும் மேற்பட்ட முஸ்லீம் அன்பர்களுடன் பெர்லிஸ் ராஜா, துவாங்கு செயிட் சிராஜூடின் ஜமாலுலையில், அம்மாநிலத்தின் முதன்மை இமாம் உடன் நோன்புப் பெருநாள் தொழுகையை மேற்கொண்டார்.
இதனிடையே, திரெங்கானு சுல்தான், சுல்தான் மிசான் சைனால் அபிடின் மற்றும் அவரின் துணைவியார் சுல்தானா திரெங்கானு சுல்தானா நூர் சஹிரா ஆகியோர் 2,500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களுடன் தியாகத் திருநாளுக்கான தொழுகையில் கலந்துகொண்டனர்.
மற்றொரு நிலவரத்தில், நெகிரி செம்பிலான், கோலா பிலா, டிராஜா துவாங்கு முனாவிர் பள்ளிவாசலில், ஆயிரகணக்கான முஸ்லீம் அன்பர்களுடன் இணைந்து அம்மாநில ஆளுநர் துவாங்கு முஹ்சிர் துவாங்கு முனாவிர் மற்றும் அவரின் துணைவியார் துவாங்கு அயிஷா ரொஹனி தெங்கு பெசார் மஹ்முட் நோன்புப் பெருநாள் தொழுகையில் ஈடுபட்டனர்.
ஜோகூர், ஜோகூர் பாருவில் உள்ள பள்ளிவாசலிலும் சுமார் 2,000 இஸ்லாமியர்களுடன் இடைக்கால ஜோகூர் சுல்தான் துங்கு மக்கோதா இஸ்மாயில் நோன்புப் பெருநாள் தொழுகையை மேற்கொண்டார்.
அதேவேளையில், கிளந்தான், கோத்தா பாரு ஜமெக் முஹமடி பள்ளிவாசலில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கலந்துகொண்ட தொழுகையில் அம்மாநில பட்டத்து இளவரசர் தெங்கு முஹமட் ஃபக்ரி பெட்ராவும் பங்கேற்றார்.
பினாங்கில் உள்ள மாநில பள்ளிவாசலில் ஏறத்தாழ 5,000 இஸ்லாமியர்களுடன் நோன்புப் பெருநாள் தொழுகையை, ஆளுநர் துன் ரம்லி ங்கா தாலிப் மற்றும் அவரது துணைவியார் தொ புவான் ராஜா நோரா அஷிகின் ராஜா அப்துல்லா மேற்கொண்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)