Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

மத்திய கிழக்கு மோதல்; விமானப் பயணங்களைக் குறைப்பதாக நிறுவனங்கள் அறிவிப்பு

22/03/2026 05:27 PM

சிக்காகோ, 22 மார்ச் (பெர்னாமா) -- மத்திய கிழக்கில் தொடரும் மோதலால் எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளதாலும், இது உலகளாவிய விமானப் போக்குவரத்துத் துறைக்கு சவாலாக இருப்பதாலும், பல விமான நிறுவனங்கள் திட்டமிடப்பட்ட விமானப் பயணங்களைக் குறைப்பதாக அறிவித்துள்ளன.

எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் ஏற்படும் விமான எரிபொருள் செலவுகளைக் கையாளக, 2026-ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளில் தங்கள் நிறுவனம் திட்டமிடப்பட்ட விமானச் சேவையை சுமார் 5 விழுக்காடு குறைக்கும் என்று யூனைடெட் ஏர்லைன்ஸ் தலைமை செயல்முறை அதிகாரி ஸ்காட் கிர்பி அறிவித்துள்ளார்.

விலைகள் தற்போதைய உயர்ந்த மட்டங்களில் நீடித்தால், அந்த நிறுவனம் ஆண்டுதோறும் கூடுதலாக 1100 கோடி அமெரிக்க டாலர் எரிபொருள் செலவுகளைச் சந்திக்க நேரிடும்.

ஏர் நியூ சிலாந்து நிறுவனம் ஏற்கனவே குறைப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தியுள்ள வேளையில், அதன்படி, இவ்வாண்டில் மே மாதத் தொடக்கம் வரை சுமார் 1,100 விமானச் சேவைகளைக் குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. 

ஸ்காண்டிநேவியன் ஏர்லைன்ஸ் நிறுவனமும், இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் சுமார் 1,000 விமானச் சேவைகளை ரத்து செய்யத் திட்டமிட்டுள்ளதை உறுதி செய்துள்ளது.

வியட்நாமில், விமான எரிபொருள் விநியோகப் பற்றாக்குறை ஏற்படும் அபாயங்கள் அதிகரித்து வருவதால், ஏப்ரல் மாதத்தில் விமானப் பயணங்கள் குறைக்கப்பட வாய்ப்புள்ளதால், அதற்குத் தயாராக இருக்குமாறு உள்ளூர் விமானப் போக்குவரத்துத் துறைக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நெருக்கடியைச் சமாளிப்பதற்காக, Qantas, ஏர் பிரான்ஸ்-கே.எல்.எம் மற்றும் ஏர் இந்தியா உள்ளிட்ட பல விமான நிறுவனங்கள், பல்வேறு வழித்தடங்களில் கட்டண உயர்வு அல்லது அதிக எரிபொருள் கூடுதல் கட்டணங்களை அமல்படுத்தியுள்ளன.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]