Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

பெருநாள்களில் உறவுகளை ஒருங்கிணைக்கும் உணவுக் கலாச்சாரம்

22/03/2026 05:58 PM

கோலாலம்பூர், மார்ச் 22 (பெர்னாமா) -- உறவுகளை ஒருங்கிணைத்து பாசப்பிணைப்பில் அவர்களை கட்டிப் போடும் சங்கிலியாக பெருநாள்கள் விளங்குவது மறுப்பதற்கில்லை.

அத்தகையப் பெருநாள்களில் இனக்கலாச்சாரங்களையும் பாரம்பரியத்தையும் உணர்த்தும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும் உணவுப் பதார்தங்களே அதன் மூல பிரதிபலிப்பு என்கின்றனர் தமிழ் பேசும் மலாய் சகோதரிகளான சுலைஹா அப்துல்லா மற்றும் அர்ஸினா அப்துல்லா.

''உணவு அனைத்து மதத்தினரையும் ஒன்றிணைக்கும் என்பார்கள். உணவின் மீது பலரும் நாட்டம் கொண்டிருப்பர். எனவே இன ஒற்றுமையை உணவிலிருந்து முதலில் தொடங்கலாம். அதில் குறிப்பாக தீபாவளி, நோன்புப் பெருநாள் போன்ற பெருநாட்களில் ஒருவர் மற்றவர் வீட்டிற்குச் சென்று அவர்களின் கலாச்சார உணவுக்ளை உண்டு மகிழ்வதுடன் பாரம்பரியத்தையும் தெரிந்து வைத்திருப்பது நன்மையாகும்,'' என்று சுலைஹா அப்துல்லா கூறினார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமது தாயார், தோட்டப்புற நினைவுகளை தம்மிடம் பகிர்ந்து கொள்ளும் போது இனம், மதம் பாராது அனைவரும் ஒற்றுமையோடு இருந்த அனுபவங்கள் குறித்து கூறியதாக சுலைஹா தெரிவித்தார்.

அதில் குறிப்பாக, பெருநாள் காலங்களில் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்யும் மனப்பாங்கு மற்றும் இன்னாருடைய வீடு என்றில்லாமல் யார் வீடாக இருந்தாலும் அனைவரும் ஒன்று சேர்ந்து துப்புரவு பணி மேற்கொள்வது போன்று அப்போது காணப்பட்ட ஒற்றுமையின் வலுவைப் பார்க்கையில் அந்த காலத்து வாழ்க்கை இன்னும் ஒருமைப்பாடு நிறைந்தது என்று தாம் உணர்வதாக அவர் கூறினார்.

தமிழ், மலாய் இரு பாரம்பரியத்தில் வளர்ந்தாலும் தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சாரம் மீதே அதிக ஆர்வம் கொண்டிருப்பதாகக் கூறிய அர்ஸினா அப்துல்லா, தாம் பெற்ற சுவையை தமது பிள்ளைகளுக்கும் தற்போது ஊட்டி வருவதாகத் தெரிவித்தார்.

''தமிழர்களின் பாரம்பரிய உணவின் சுவை குறித்து கற்றுத் தருவேன். தமிழில் சரளமாக பேசுவதற்கு கற்றுத் தருவேன். தமிழ்ப்பாடல்கள் குறித்து உடை மற்றும் ஆபரணங்கள் குறித்தும் சொல்லித் தருவேன்,'' என்று தங்கையான அர்ஸினா குறிப்பிட்டார். 

தங்களின் இருவரின் கணவர்களும் மலாய்க்காரர்களாக இருந்தாலும் தங்களோடு சேர்ந்து அவர்களும் தற்போது தமிழை நேசிக்கத் தொடங்கியுள்ளதுடன், அம்மொழியை ஓரளவிற்கு பேச கற்று வருவதாகவும் சகோதரிகள் இருவரும் தெரிவித்தனர்.

நோன்புப் பெருநாளை முன்னிட்டு பெர்னாமா தமிழ்ச்செய்தியின் பார்வை கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு வருகைப் புரிந்த அவர்கள், அந்த சுவாரசியமான அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)