கோலாலம்பூர், 23 மார்ச் (பெர்னாமா) -- திவால் பிரச்சனையை எதிர்நோக்கும் நபர்கள், தங்களது வாழ்க்கையை எந்தவொரு இடையூறுமின்றி தொடர 'இரண்டாவது வாய்ப்பு கொள்கை' எனும் திட்டத்தை மலேசிய திவால் துறை அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தொடர்ந்து பங்களிப்பதற்கான முக்கிய அணுகுமுறைகளில் ஒன்றாக இத்திட்டம் அமைகிறது.
திவாலில் சிக்கிய தரப்பினர், மீண்டும் வழக்க நிலைக்கு திரும்ப இத்திட்டம் உறுதுணையாக இருக்கும் என்பதால், இத்திட்டத்தில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து பகிர்கின்றார் வழக்கறிஞர் கஸ்தூரி கிருஷ்ணன்.
மலேசியாவில் நாற்பது வயதிற்குட்பட்டவர்களில் அதிகமானோர் திவால் பிரச்சனையை எதிர்நோக்குகின்றனர்.
அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே அரசாங்கம் மூன்றாவது முறையாக அதாவது 'இரண்டாவது வாய்ப்பு கொள்கை 3.0' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
முன்னதாக, 2023ஆம் ஆண்டு, இத்திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருந்தாக கஸ்தூரி கிருஷ்ணன் தெரிவித்தார்.
''திவாலாகிவிட்டால் வேலை வாய்ப்புகளை இழக்கின்றனர். வருமானத்தை இழக்கின்றனர். திவாலானவர்களுக்கு ஈ.பி.எஃப் பிடித்தத்துடன் வேலை கிடைப்பதில் சிரமம் ஏற்படும். வர்த்தகத்திற்கு கடனுதவிப் பெற முடியாது. வங்கிக் கணக்குகள் வைத்திருக்க முடியாது. வீடு வாங்க முடியாது. நிறையப் பிரச்சனைகளை அவர்கள் சந்திப்பார்கள். அதனால்தான், வெகு விரைவில் இதற்கு தீர்வு காணக்கூடிய வழியை ('fast track' ) மடானி அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது,'' என்றார் அவர்.
இந்நிலையில், இத்திட்டம் அனைத்து தரப்பினருக்குமானது அல்ல என்று கூறிய கஸ்தூரி, தனித்து வாழும் தாய் அல்லது தந்தை, மோசடிக்கு ஆளானவர்கள் உட்பட குறிப்பிட்ட நான்கு பிரிவினர்கள் மட்டுமே இதற்கு தகுதி பெறுவார்கள் என்றும் அதற்கான காரணத்தையும் விளக்கினார்.
''மூன்றாவதாக, சிறு வர்த்தகத்திற்காக கடனுதவியை வாங்கியவர்கள். கடனை திரும்ப செலுத்த முடியாத பட்சத்தில் திவாலாகி இருப்பவர்கள் இதற்கு தகுதி பெறுவார்கள். நான்காவது, சிலர் மேம்பாட்டாளரிடம் இருந்து புதிய வீடு வாங்கி இருப்பர். ஆனால், மேம்பாட்டாளர்கள் அத்திட்டத்தை முடிக்காமல் கைவிட்டிருப்பார்கள். எனினும், வங்கி அதற்கான (புதிய வீட்டிற்கான) கடனை வழங்கி இருக்கும். வங்கியின் அக்கடனை திரும்பச் செலுத்தாததால் வங்கி அவர்களை திவால் ஆனவர்களாக வகைப்படுத்தி இருக்கும். இந்த நான்கு பிரிவினர் மட்டுமே இதற்கு தகுதி பெறுவார்கள்,'' என்றார் அவர்.
மற்றொரு நிலவரத்தில், இந்த நான்கு பிரிவினர்கள் தகுதிப் பெற்றிருந்தாலும் இதில் சில முன் நிபந்தனைகள் இருக்கின்றன.
திவாலாகி ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகியிருந்தால் மட்டுமே, இந்த இரண்டாவது வாய்ப்பு கொள்கை திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என்பதை கஸ்தூரி உதாரணத்துடன் விளக்கினார்.
''e-Insolvensi என்ற அகப்பக்கம் ஒன்று உள்ளது. அதில் உங்களுடைய தகவல்களைச் சமர்பித்தால், அதுவே உங்களுக்கான தகுதியைக் கொடுத்துவிடும்,'' என்றார் அவர்.
எனவே, மடானி அரசாங்கம் வகுக்கும் இது போன்று திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கொண்டிருக்க வேண்டும் என்பதோடு, அதனைப் பயன்படுத்தி திவால் பிரச்சனையினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபட முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)