Ad Banner
Ad Banner
 உலகம்

இந்தோனேசியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை

28/03/2026 04:56 PM

ஜகார்த்தா, 28 மார்ச் (பெர்னாமா) --  16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு இந்தோனேசிய அரசாங்கம் இன்று அதிகாரப்பூர்வமாகத் தடை விதித்திருக்கிறது.

அதிக ஆபத்துடைய தளங்களில் குறைந்த வயதுடையோர் பயன்படுத்தும் சமூக ஊடக கணக்குகளைப் படிப்படியாகச் செயலிழக்கச் செய்யக் கோரும் இலக்கவியல் பாதுகாப்பு மற்றும் சிறார் கண்காணிப்பு நடவடிக்கையின் கீழ் இத்தடை செயல்படுத்தப்படுவதாக இந்தோனேசிய அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது.

மேற்கத்திய நாடுகளைத் தவிர்த்து, இத்தடையை அமல்படுத்தும் முதல் நாடாக இந்தோனேசியா நடவடிக்கை எடுத்துள்ளது.

அரசாங்கத்தின் இத்தடை அமலாக்கத்தில் எவ்வித சமரசமும் இருக்காது என்றும், நாட்டிலுள்ள அனைத்து இலக்கவியல் தளங்களும் சட்டங்களுக்கு உட்பட்டு இதனை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று இந்தோனேசிய அதிபர் பிரபாவோ சுபியந்தோ தெரிவித்திருக்கிறார்.

இத்தடை அமலாக்கத்திற்கான செயல் திட்டங்களைச் சமர்ப்பிப்பது உட்பட சமூக ஊடக நிறுவனங்கள் இத்தடையை பின்பற்ற போதிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இத்தடை உட்பட தற்போதுள்ள சட்டங்களுக்கு இணங்காத தளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசாங்கத்திற்கு முழு அதிகாரம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)