டிங்கில், ஏப்ரல் 01 (பெர்னாமா) -- மோசமான நிலையில் உள்ள டிங்கில் தமிழ்ப்பள்ளி கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்னதாகவே நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்திட்டத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது 65 விழுக்காட்டிற்கும் மேல் நிறைவடைந்துள்ள வேளையில், ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவை விட 70 நாள்கள் முன்னதாகவே அப்பணிகள் நிறைவடைந்துள்ளதாக கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார்.
ஒரு கோடியே 33 லட்சம் மதிப்பிலான 12-வது மலேசியத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்தக் கட்டுமானப் பணிகள், நிர்வாகத்திற்கான ஒரு கட்டிடம், எட்டு வகுப்பறைகள் கொண்ட கல்விக் கட்டிடம் மற்றும் ஒரு புதிய பாலர் பள்ளிக் கட்டிடம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளதாக அவர் விவரித்தார்.
"இவ்வாண்டு அக்டோபர் 12-ஆம் தேதி பணிகள் நிறைவடையும் என முதலில் நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், இத்தகையச் சிறப்பான அடைவுநிலையின் மூலம், கட்டுமானப் பணிகள் நிறைவடையும் உண்மையான தேதியை மாற்றியமைக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியும் என நம்புகிறோம். இதன்வழி, இந்தப் புதிய கட்டிடங்களைக் கல்வி அமைச்சிடம் கூடிய விரைவில் ஒப்படைக்க முடியும். மேலும், மிகவும் உகந்த கற்றல் சூழலுக்காக, டெங்கில் தமிழ்ப்பள்ளியும் கூடிய விரைவில் இக்கட்டிடத்தைப் பயன்படுத்த முடியும்,'' என்றார் அவர்.
இதனிடையே, கல்வி துணை அமைச்சரின் வருகையின் போது பல தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டதாக டெங்கில் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியை புஷ்பா ராமன் கூறினார்.
உள் வடிகால் அமைப்பை மேம்படுத்துவது மற்றும், அருகிலுள்ள ஆறுகளில் வெள்ளத் தடுப்புத் திட்டங்களுக்காக எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சுடன் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்றவற்றின் மூலம், வெள்ளப் பிரச்சினைகளிலும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)