Ad Banner
Ad Banner
 பொது

கோத்தா ஸ்டார் & பெண்டாங்கில் செவ்வாய் வரை பி.டி.பி.ஆர் அமல்

29/03/2026 04:43 PM

அலோர் ஸ்டார், மார்ச் 29 (பெர்னாமா) -- பி.டி.பி.ஆர் எனப்படும் இல்லிருப்பு கற்றல் முறையை செயல்படுத்துவது தொடரப்படுமா அல்லது இல்லையா என்பதை தீர்மானிப்பதற்கு முன்னதாக, மலேசிய வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்படும் வெப்பநிலை அளவீட்டினை கெடா மாநிலக் கல்வித் துறை ஜே.பி.என் தொடர்ந்து கண்காணிக்கும்.

தொடர்ந்து மூன்று நாள்களாக கோத்தா ஸ்டார், பெண்டாங் ஆகிய மாவட்டங்களில் தினசரி வெப்பநிலை இரண்டாம் கட்டதை அடைந்ததைத் தொடர்ந்து, இன்று தொடங்கி செவ்வாய்க்கிழமை வரை இல்லிருப்பு கற்றல் முறை பி.டி.பி.ஆர் அமல்படுத்தப்படவிருப்பதாக கெடா மாநில கல்வித்துறை இயக்குநர் அப்துல் ரஹிம் மாட் தெரிவித்தார்.

மொத்தம் 86,030 மாணவர்கள் இல்லிருப்பு கற்றல் திட்டத்தில் உட்படுத்தப்படுவார்கள் என்று கூறிய அப்துல் ரஹிம், அதில் கோத்தா ஸ்டாரில் 154 பள்ளிகளைச் சேர்ந்த 65,634 மாணவர்களும், பெண்டாங்கில் 154 பள்ளிகளைச் சேர்ந்த 65,634 இடம்பெற்றிருப்பார்கள் என்று விவரித்தார்.

வெப்பமான காலநிலையில் கல்வி நிறுவனங்களின் செயல்பாடு தொடர்பான அமைச்சின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்பவே, இந்த இல்லிருப்பு கற்றல் அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

"நாட்டின் வடபகுதியில் குறிப்பாக, கெடா மாநிலத்தில், 37 பாகை செல்சியஸ் என்பது மிகவும் வெப்பமான நிலை. வெயில் வேளையிலும் நண்பகல் நேரத்திலும் பிள்ளைகளின் வெளிப்புற நடமாட்டம் இருக்கக் கூடாது என்பதால், நாங்கள் இம்முடிவை எடுத்துள்ளோம்," என்றார் அவர்.

இன்று அலோர் ஸ்டாரில் உள்ள தங்கும் வசதியுடைய சுல்தானா அஸ்மா இடைநிலைப்பள்ளியை பார்வையிட்ட பின்னர், அப்துல் ரஹிம் செய்தியாளர்களிடம் பேசினார்.

இதனிடையே, வெப்பமான வானிலை நீடித்தாலும், கற்றல் கற்பித்தல் நடவடிக்கை வழக்கம் போல தொடரப்பட்டதாக அவர் கூறினார்.

இருப்பினும் வெப்பமான வானிலை காரணமாகப் பள்ளிகள் மூடப்பட வாய்ப்புள்ளதாக கடந்த புதன்கிழமை முதலே முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால் கல்வித்துறை, பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்திருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)