பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 02 (பெர்னாமா) -- மேன்மை தங்கிய திரெங்கானு சுல்தான், சுல்தான் மிசான் ஜைனல் அபிடின் அவர்கள், மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனை சந்திக்க அனுமதி வழங்கினார்.
இச்சந்திப்பின் போது, மாநிலத்தில் கட்டப்பட்டு வரும் பெர்கேசோ மறுவாழ்வு மையத்தின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து சுல்தானிடம் அமைச்சர் விளக்கினார்.
அந்தச் சந்திப்பில், நாட்டின் சமூகப் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றத் திட்டமிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ரமணன் விளக்கமளித்தார்.
ரமணனின் கூற்றுப்படி, இந்த மையம் காயம் அடைந்த அல்லது ஊனமுற்ற பெர்கேசோ பங்களிப்பாளர்கள், குறிப்பாக திரெங்கானு மக்கள், மீண்டும் குணமடைந்து வேலைக்குத் திரும்புவதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் என்றார்.
"இந்த முன்முயற்சி வெறும் சிகிச்சை மையம் மட்டுமல்ல, குணமடைந்த பிறகு மக்கள் மீண்டும் வேலைச் சந்தையில் தீவிரமாக ஈடுபடுவதற்கான திறனை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது," என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
மக்களின் நலனில் சுல்தான் மிசான் அவர்கள் காட்டும் அக்கறைக்கும், உள்ளூர் சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய இத்திட்டத்திற்கு அவர்கள் வழங்கும் ஆதரவிற்கும் டத்தோஶ்ரீ ரமணன் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
தேவைப்படும் தொழிலாளர்களுக்கு உகந்த பலன்களை வழங்கும் வகையில், இந்தத் திட்டம் திட்டமிட்டபடி செயல்படுத்தப்படுவதை மனிதவள அமைச்சு உறுதி செய்யும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
திரெங்கானுவில் உள்ள இந்த பெர்கேசோ மறுவாழ்வு மையம், விரிவான மற்றும் ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவைகளை வழங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று அவர் கூறினார்.
"திரெங்கானுவில் தரமான சுகாதார வசதிகள் மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கான அணுகலை விரிவுபடுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப இது அமைந்துள்ளது," என்று அவர் மேலும் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)