ஜார்ஜ்டவுன், 13 ஏப்ரல் (பெர்னாமா) -- பினாங்கு, ஜார்ஜ்டவுனில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்த இருவரில் அனுபவம் வாய்ந்த முன்னாள் வழக்கறிஞர் டத்தோ சன் மார்கன் கணபதியும் ஒருவர் ஆவார்.
கிங் ஸ்டிரீட்டில் சட்ட அலுவலகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு கடை வீட்டில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
சம்பந்தப்பட்ட கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள அலுவலக ஜன்னலுக்கு அருகே இருந்த ஒரு நாற்காலியில், பிற்பகல் மணி 1.05 அளவில் டத்தோ சன் மார்கனின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக பினாங்கு மாநில மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் முஹமட் ஷொகி ஹம்சா தெரிவித்தார்.
இதனிடையே அந்த நிறுவனத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்த பி. ஜே. சந்திரா என்ற பெண், பிற்பகல் மணி 3.26 அளவில், கோப்புகள் குவியலுக்கு அடியில் கண்டெடுக்கப்பட்டார்.
சம்பவத்தின்போது, மேல் தளத்தில் மூன்று ஊழியர்கள் இருந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில், ஒருவர் உயிர் தப்பியதாகவும் எஞ்சிய இருவர், புகையை சுவாசித்ததன் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுவதாக முஹமட் ஷொகி கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)