Ad Banner
Ad Banner
 பொது

எம்.டி.ஏ விருதை வென்றது பெர்னாமா

13/04/2026 05:36 PM

புத்ராஜெயா, 13 ஏப்ரல் (பெர்னாமா) --  இன்று நடைபெற்ற 2025-ஆம் ஆண்டு மருத்துவ உபகரணங்களுக்கான அதிகார அமைப்பு, எம்.டி.ஏ விழாவில் அச்சு ஊடகம் மற்றும் செய்தித் தளப் பிரிவில் மலேசிய தேசிய செய்தி நிறுவனம், பெர்னாமா விருது வென்றது.

கடந்தாண்டு முழுவதும் எம்.டி.ஏ-வின் செயல்பாடுகள் மற்றும் முன்னெடுப்புகள் குறித்து பெர்னாமா வெளியிட்ட தரமான மற்றும் தொடர்ச்சியான செய்திகளை அங்கீகரிக்கும் விதமாக இவ்விருது வழங்கப்பட்டது.

சுகாதார அமைச்சின் துணை தலைமைச் செயலாளர் டத்தோ அசா ஹனிம் அஹ்மட், 2025 எம்.டி.ஏ-வின் சிறந்த சேவை விருதை பெர்னாமாவின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தின் படுக்கா நூருல் அஃபிடா கமாலுடினுக்கு வழங்கினார்.

அதோடு, தொலைக்காட்சி பிரிவில் ஆர்.டி.எம்-மிற்கும், வானொலி பிரிவில் பி.எஃப்.எம்-முக்கும் விருது வழங்கப்பட்டது.

மருத்துவ துறையை மேம்படுத்தவும் உயர்த்தவும் எம்.டி.ஏ மேற்கொள்ளும் முயற்சிகளை மக்களுக்குத் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வழங்கும் பெர்னாமாவின் அர்ப்பணிப்பை, இந்த அங்கீகாரம் பிரதிபலிப்பதாக பெர்னாமாவின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தின் படுக்கா நூருல் அஃபிடா கமாலுடின் கூறினார்.

"எம்.டி.ஏ-வைப் பொறுத்தவரை, அதிகாரப்பூர்வமாக பதிவுச் செய்யப்பட வேண்டிய மருத்துவப் பொருட்களை ஒழுங்குப்படுத்துவதற்கான அதன் முயற்சிகளுக்கு நாங்கள் செய்தி வெளியீட்டின் மூலம் வழங்கும் ஆதரவின் வழி என்று நான் நம்புகின்றேன். அதோடு, உயர்தர பொருட்கள் தொடர்பான கண்ணோட்டத்தில் எம்.டி.ஏ-வின் முயற்சிகளையும் உள்ளூர் மருத்துவத் துறையில் பயன்படுத்தக் கூடியவற்றையும் நாங்கள் செய்தியில் விவரிக்கின்றோம்", என்றார் அவர்.

2023-ஆம் ஆண்டு தொடங்கி எம்.டி.ஏ-விடமிருந்து விருதுகளைப் பெறுவது பெருமைக்குரிய சாதனை என்றும், தரமான செய்திகளை வழங்குவதில் செய்தி துறையின் உயர் அர்ப்பணிப்பை இது பிரதிபலிப்பதாக டத்தின் படுக்கா நூருல் அஃபிடா புகழாரம் சூட்டினார்.

இதனிடையே, சட்டப்பூர்வமான மற்றும் பதிவுச் செய்யப்பட்ட மருத்துவ சாதனங்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஊடகச் செய்திகளைத் தயாரிக்கும் ஊடகவியலாளர்களை அங்கீகரிக்கும் விதமாக, இவ்விருது அமைவதாக பெர்னாமா செய்தி பிரிவு ஆசிரியர் சூரியாதி சிடேக் அஹ்மட் கூறினார்.

"இந்த விருது விழிப்புணர்வுக்காக மேலும் செய்திகளை உருவாக்க எங்களுக்கு ஓர் உற்சாகத்தை அளிக்கின்றது.குறிப்பாக, இளைய தலைமுறையினர்கள். முறையான மற்றும் பதிவுச் செய்யப்பட்ட சுகாதார சாதனம் எவ்வளவு முக்கியமானது," என்றும் அவர் குறிப்பிட்டார்.

பதிவுச் செய்யப்பட்ட மற்றும் பாதுகாப்பான மருத்துவ சாதனங்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஊடகங்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்று ஆய்வுக் கட்டுரை மற்றும் நடப்பு விவகாரங்கள் பிரிவைச் சேர்ந்த ஊடகவியலாளர் முஹமட் பசிர் ரொஸ்லான் கூறினார்.

"எனவே நாங்கள் பெர்னாமாவில் தொடர்ந்து செய்திகளை வெளியிடுவோம். தலையங்கப் பிரிவு மூலமாக செய்திகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் தொடர்பான அண்மைய பிரச்சனைகள் உட்பட அதில் எழுதுவோம்," என்றும் முஹமட் பாசிர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)