கோலா கங்சார், 04 ஏப்ரல் (பெர்னாமா) -- தற்போது உலகளவில் ஏற்பட்டிருக்கும் எரிசக்தி நெருக்கடியை சமாளிப்பதற்கான தீர்வுகளை கண்டறிவதற்கு, விவாதம் மூலம் அரசாங்கத்திற்கு உதவ விரும்பும் எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் முடிந்தவரை வாய்ப்பை வழங்குவதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரம், குறிப்பாக, உயர்ந்து வரும் உலக எண்ணெய் விலை தொடர்பான எந்தவொரு விவாதமோ அல்லது கருத்தோ, வெறும் விமர்சனமாக மட்டுமல்லாமல், துல்லியமான அறிவு மற்றும் உண்மைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
"பொருளாதார நெருக்கடி எங்கள் கையில் இல்லை. சில சமயங்களில் எதிர்கட்சியின் கருத்துகள் நுட்பமானவையாக இருப்பதை நாங்கள் காண்கின்றோம். எங்களால் கண்டிக்கப்பட்டது. நல்ல வழியில் விவாதிப்பதற்கான நேரம் இது. ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் அறியாமையிலும் நிச்சயமற்ற தன்மையிலும் இருக்காதீர்கள். புரிதல் இல்லை. அறிவு இல்லை," என்றார் அவர்.
இன்று, பேராக், கோலா கங்சாரில் உள்ள கிளிஃபோர்ட் இடைநிலைப்பள்ளியில் குடியிருப்பாளர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு, பிரதமர் அதனை கூறினார்.
இதனிடையே, ஆசியான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் எண்ணெய் விநியோகப் பற்றாக்குறையால் முன்னதாகவே பங்கீட்டு முறை நடைமுறையில் உள்ளதாகவும், மலேசியாவும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதால், உதவக்கூடிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அன்வார் கூறினார்.
''ஓர் ஆசியான் நாட்டில் 400 பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதைப்பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். இந்தப் பிரச்சனையிலிருந்து நாம் தப்பவில்லை. அதனால்தான் நான் என் நண்பர்களை அழைக்கிறேன், நம்மால் என்ன செய்ய முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். போக்குவரத்துச் செலவு அதிகமாக இருப்பதால், தலைவர்கள், அமைச்சர்களின் அனைத்து வெளிநாட்டுப் பயணங்களையும் நான் ரத்து செய்துள்ளேன்,'' என்று அவர் குறிப்பிட்டார்.
மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து ஏற்பட்ட உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின் வளர்ச்சியை விரிவாக ஆய்வு செய்வதற்காக, ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெற்ற மந்திரி புசார் மற்றும் முதலமைச்சர் ஆகியோருக்கான சிறப்புக் கூட்டத்திற்கு பிரதமர் தலைமைத் தாங்கினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)