கோத்தா பாரு, 05 ஏப்ரல் (பெர்னாமா) -- உதவித்தொகைக்கு உட்பட்ட டீசல் கட்டுப்பாட்டுத் திட்டம், எஸ்.கே.டி.எஸ்-இன் அமலாக்கம், இதற்கு முன்பு இருந்த ஏழு லட்சம் ரிங்கிட்டைக் காட்டிலும் கடந்த மார்ச் மாதம் மூன்று மடங்காக அதாவது 220 கோடி ரிங்கிட்டாக அதிகரித்தது.
உலகச் சந்தையில் டீசல் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து, ஒதுக்கீட்டுச் செலவில் அந்த உயர்வு ஏற்பட்டுள்ளதாக உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிசான் முஹமட் அலி தெரிவித்தார்.
பிப்ரவரி 26ஆம் தேதி ஒரு பீப்பாய் 93 அமெரிக்க டாலராக இருந்த டீசல் விலை, கடந்த மார்ச் 31-க்குள் 239 அமெரிக்க டாலராக உயர்ந்து, உலகச் சந்தையில் டீசல் விலை 158 விழுக்காடு கணிசமான அதிகரிப்பைக் காட்டுவதாக டத்தோ அர்மிசான் கூறினார்.
''தற்போதைய டீசல் விலை உயர்வு அடிப்படையிலான கணிப்புகளின்படி, எஸ்.கே.டி.எஸ் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான மொத்த டீசல் உதவித்தொகை ஒதுக்கீட்டுத் தேவை, 2025ஆம் ஆண்டு செலவிடப்பட்ட ஆண்டுக்கு 345 கோடியைக் காட்டிலும் மாதத்திற்கு 220 கோடி ரிங்கிட்டாக உள்ளது'', என்றார் அவர்.
ஞாயிற்றுக்கிழமை, கிளந்தான் மாநில Ops Tiris 4.0 அமலாக்கம், கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களின் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் பெட்ரோல் நிலைய நடத்துனர்களுக்கான 1961-ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டம் குறித்த விளக்கமளிப்புக் கூட்டத்திற்குப் பின்னர் அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
மேற்கு ஆசிய மோதலைத் தொடர்ந்து ஏற்பட்ட உலகளாவிய எரிசக்தி நெருக்கடியால் டீசல் விலை உயர்ந்தாலும், இலக்கிடப்பட்ட டீசல் உதவித்தொகை திட்டத்தைத் தொடர அரசாங்கம் உறுதிகொண்டுள்ளது.
மற்றொரு நிலவரத்தில், எரிபொருள் கொள்முதல் செலவை ஏற்க வேண்டியிருந்த பெட்ரோல் நிலைய உரிமையாளர்களின் கோரிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்த டத்தோ அர்மிசான் தங்கள் தரப்பு நிதி அமைச்சுடன் இது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தும் என்று கூறியிருக்கிறார்.
''இதுவரை நாங்கள் சிந்தித்த அணுகுமுறைகளில், பணத்தைத் திரும்ப அளிக்கும் செயல்முறையை எவ்வாறு விரைவுபடுத்துவது என்பது குறித்து நிதி அமைச்சுடன் நாங்கள் கலந்துரையாடவிருக்கிறோம். இதன் மூலம், அதற்கானச் செயல்முறையை விரைவுபடுத்தி, அவர்கள் (பெட்ரோல் நிலைய நடத்துநர்கள்) அதை விரைவில் பெற முடியும்'' என்றார் அவர்.
உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டு செயல்பாடுகளின் தொடர்ச்சியையும் பொருளாதார மீள்திறனையும் உறுதி செய்வதற்காக சம்பந்தப்பட்ட நடத்துனர்கள் தங்களின் அவசரகாலத் திட்டங்களை உடனடியாக வகுத்துச் செயல்படுத்த அறிவுறுத்தப்படுகின்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)